குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறச் சங்கத்தின் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலை இன்று(08) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு குறித்த உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்தார்.
சங்கத்தின் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கள் சில வேளைகளில் விற்பனைக்கு அப்பால் எஞ்சியவற்றை நிலத்தி ஊற்றுவது அல்லது குறைந்த விலையில் ஏனைய வடிசாலைகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இதனால் தொழிலாளர்களும் சங்கத்திற்கும் பெரும் வருமான இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் எடுத்து சங்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் நிதி அமைச்சருடன் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக தற்போது பளை பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்திற்கு போத்தலில் கள் அடைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்தே போத்தலில் கள் அடைப்பதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் சங்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் வருமான அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் மேலதிக கள் போத்தலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதோடு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும் எனவும் சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் இராசதுறை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் சாந்த தேவ டி சில்வா, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.எம். சுபைர், மற்றும் கிளி நொச்சி, பூநகரி கூட்டுறவு பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் பொது முகாமையாளர்கள், வட மாகாண பனை தென்னை வள பேரிணையத்தின் பொது முகாமையாளர் தொழிலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்