ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும் என்பதுடன் இதன் காரணமாக ஈரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையும் அதோடு தொடர்புடைய மற்ற சில அமைப்புகளும் அணுஆயுத பரவல், பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவற்றின் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில் தற்போது இவ்வாறு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
மற்றொரு நாட்டின் ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவிப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
இதேவேளை இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது
Add Comment