ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை வரும் 22-ம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
1967-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் தடை செய்யப்பட்டதைத்தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தீவிரவாத செயல்களுக்கு நிதி அளிக்கப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் நேற்று முன்தினம் டெல்லி கொண்டு வரப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டதுடன் அவர் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து வரும் 22-ம் திகதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவது, பாடசாலைகளுக்கு தீவைப்பது, அரசு அலுவலகங்களை சேதப்படுவது போன்ற வன்முறைச் செயல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் வெளியில் இருந்து நிதி பெறப்படுகிறது. இதற்கு பின்னணியில் இருந்து செயல்படுபவர்களை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது