மத்திய மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் மே மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படுமென மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன இன்று (11.04.2019 ) நோர்வூட் பிரதேச மக்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இச்சந்திப்பில் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பிரதேச மக்கள் இக்கலந்துரையாலில் கலந்து கொண்டனர்.
இதன் போது நோர்வூட் பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் பற்றியும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த ஆளுநர், எனக்கு அதிகமான முறைப்பாட்டு கடிதங்கள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இவ்விஜயத்தை மேற்கொண்டேன். இங்கு தெரிவித்த முறைப்பாடுகளில் ஒன்றான காணிப்பத்திரம் வழங்கப்படாமை தொடர்பில் கிராம உத்தியோத்தரிடம் கேட்டபோது ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் இதற்கான தீர்வை வழங்குவதாக கூறினார்.
அத்துடன் அம்பகமுவ பிரதேச செயலாளருடன் இதைப்பற்றி கலந்துரையாடி இதனை துரித கதியில் வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நோர்வூட் பாடசாலையில் நிலவி வந்த இடப்பற்றாக்குறையை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனவே இதற்கான தீர்வை இன்னும் இரு மாதத்திற்குள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் நான் ஆளுநராக பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் பார்வையிட்ட இடங்களில் நோர்வூட் பிரதேசம் சிறந்த முறையில் உள்ளது. ஏனென்றால் இங்கு சகல வசதிகளுடன் கிளங்கன் வைத்தியசாலை காணப்படுகின்றது.
ஆனால் இங்கு வைத்தியர் மற்றும் தாதியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இப்பிரச்சினை இங்கு மற்றும் அல்ல நாட்டில் சகல பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. இதில் மத்திய மாகாணத்தில் 350 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது.
அதனால் அரச வைத்திய அதிகாரிகளுடன் கதைத்திருப்பதாகவும் இச்சந்தர்பத்தில் அரச வைத்திய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வசித்திவரும் மத்திய மாகாணத்திற்கு முதலில் பற்றாக்குறை நிவர்த்தி செய்து தருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றதுடன் தாதியரின் பற்றாக்குறையை மே மாதத்திற்குள் நிவர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)