குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தனது வாகனத்தை விட்டு இறங்காது பதிலளித்தமைக்கு எதிராகவும் , பேச்சு நடத்த அழைத்த போது அதற்கு வராது சென்றமைக்கு எதிராகவும் யாழ்.மாவட்ட காவல்துறை அத்தியட்சகரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் முறையிட்டுள்ளார்.
மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்கு காணி சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு செய்யும் பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு காணி உரிமையாளர்கள் , பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்க முடியாது காணி அளவீடு செய்வதற்கு சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் , சம்பவ இடத்தில் தனது வாகனத்தில் அமர்ந்திருந்த ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் சம்பவம் தொடர்பில் விசாரித்த போது அதற்கு குறித்த அதிகாரி தனது வாகனத்தை விட்டு இறங்காது ஆசனத்தில் அமர்ந்திருந்த வாறே பதிலளித்தார்.
அதேவேளை நில அளவை பிரச்சனை தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்துவோம் என குறித்த காவல்துறை அதிகாரியை பாராளுமன்ற உறுப்பினர் அழைத்த போது அதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை அதிகாரி , தான் நீதிமன்றுக்கு செல்ல வேண்டும் என கூறி அங்கிருந்து சென்றார்.
இவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்.மாவட்ட காவல்துறை அத்தியட்சகரிடம் முறையிட்டுள்ளார்.