திரைப்படம் ஒன்றுக்கு தடை விதித்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசுக்கு 20 லட்சம் ரூபா அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் அனிக் தத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள வங்க மொழி திரைப்படமான போபிஸ்யோதர் பூத் மேற்கு வங்கத்தில் உள்ள திரையரங்குகளில் கடந்த பெப்ரவரி 15-ம் திகதி திரையிடப்பட்டது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கேலி செய்யும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதனையடுத்து பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி இந்த திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு பிப்ரவரி தடை விதித்தது.
இதனை எதிர்த்து, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோல் திரைப்படத்துக்கு தடை விதிப்பது என்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்ததுடன் திரைப்படத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்றும், திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டது.
எனினும், இந்த திரைப்படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவிடாமல் மேற்கு வங்க அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிப்பபட்டதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், மேற்கு வங்க அரசுக்கு 20 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத்தை தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.