தண்டனை பெற்று பரோலில் வெளிவந்த கைதிகளை தேர்தல் பணியில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தலைமைத் தேர்தல் ஆணையகம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது
நேற்றையதினம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையகச் செய்தித் தொடர்பாளர், தண்டனை பெற்ற கைதிகளை பரோலில் விடுவிப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படும் என தெரிவித்துள்ளர்.
மேலும் மிகவும் அவசியமான காரணங்களுக்காக தண்டனைக் கைதிகளை பரோலில் விடுவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் மாநில அரசு கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் அவ்வாறு விடுவிக்கப்படும் நபர்கள் தேர்தல் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதைப் பொருள் வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர் அவர்களுக்கு கட்டாயம் பரோல் வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், போதை பொருள் தடுப்பு பிரிவினர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 14,000 பேர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலர் பரோலில் வெளிவந்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது