தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள 37 இடங்களில் அகழாய்வு மேற்கொள்வது தொடர்பாக மத்திய, மாநிலத் தொல்லியல் துறையினரை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்
ஆங்கிலேயர் காலத்தில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தாமிரபரணி ஆற்றுப்படுகை முழுவதும் பரவி இருக்கிறது என்று பிரித்தானியாவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் அலெக்சான்ட்ரியா சான்றுகளுடன் நிரூபித்திருந்தார். தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மேலும் 37 இடங்களை அகழாய்வு செய்தால் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கும் என அவரது குறிப்புகளில் உள்ளது.
குறிப்பாக ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, காயல்பட்டினம், வல்லநாடு, பாலாமடை, கருங்குளம் உள்ளிட்ட 37 இடங்களில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். எனினும் தற்போது வரை அங்கு உரிய ஆய்வு நடத்தப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே நடந்த வழக்கு விசாரணையின்போது, ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பொருட்கள் கி.மு. 905, கி.மு. 791 காலகட்டத்தைச் சேர்ந்தவை என கார்பன் பரிசோதனையில் தெரிய வந்ததாகக் மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்ளிட்ட 37 இடங்களில் அகழாய்வு செய்வது குறித்து மத்திய, மாநிலத் தொல்லியல் துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்