பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 513 முறை பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட காலமாக அமுலில் உள்ள போதும் இந்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் புலவாமாவில் துணை ராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலகோட் தாக்குதலுக்கு பின்னரான கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் காஷ்மீர் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ளதெனவும் இதில் பீரங்கி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை 100 முறைக்கும் மேலாக பயன்படுத்தி இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தாக்குதல்களில் தமது தரப்பில் 4 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். சுமார் 45 பேர் காயமடைந்து உள்ளனர் எனவும் இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது