மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருவதாகவும், இதற்கு அப்பகுதியில் இயங்கி வரும் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து அப்பகுதி பெண்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
மதுராந்தகம் அருகே உள்ள கே.கே.புதூரில் கடந்த 9 ஆண்டுகளாக பயோ மெடிக்கல் கழிவுகளை அழிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து எரித்து அழிக்கின்றனர். இவ்வாறு அழிக்கும்போது வெளியேறும் நச்சுப் புகையால் இந்த கிராமம் மட்டுமின்றி அருகில் உள்ள இருசாமநல்லூர்,கினார், தோட்டநாவல் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சுமத்தி வருகின்றனர்.
இந்த ஆலை முதலில் தொடங்கும்போது தங்களுக்கு பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை எனவும் ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகள் உருவாகி வருகின்றன எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர்.தோல் நோய், மூச்சுத் திணறல் போன்ற நோய்கள் அதிகம் வருகின்றன எனவும் ஒரு குழந்தையின் உடல் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவாகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு தனியார் மருத்துவமனை சார்பில் அந்தப் பகுதிக்கு சென்ற வைத்தியர்கள் 40 பேருக்கு சோதனை நடத்தியதில் அதில் 5 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பதாக கூறியுள்ளதால் அச்சத்தில் உள்ள மக்கள் இந்த நோய்களுக்கு அந்த ஆலை வெளியிடும் புகைதான் காரணமா என்பது குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கொரிக்கை விடுத்துள்ளனர்.