குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொடிகாமம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் தண்ணீர்ப் பிரச்சினைக்கு எதிர்கொண்டுள்ளனர். உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல்துறை உத்தியோகத்தர்கள் கவலை தெரிவித்தனர்.
குடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதாகவும் கிணறுத் தண்ணீர் வற்றியதால் ஏனைய தேவைகளுக்கான தண்ணீரைப் பெற முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொடிகாமம் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர்.
காவல்துறை நிலையத்துக்குத் தேவையான குடிதண்ணீர் இயக்கச்சி இராணுவ முகாம் காணிக்குள் இருந்து வாரம் ஒரு முறை பவுசரில் எடுத்துவரப்பட்டது. எனினும் மாதத்தில் இருமுறை மட்டுமே அந்த இடத்திலிருந்து குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
அதனால் குடிதண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினை உள்ளது. அதனால் உத்தியோகத்தர்கள் தமது பணத்தில் குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்கின்றனர். எனினும் காவல் நிலையத்துக்குள் இருக்கும் கிணற்றில் தண்ணீர் அடிமட்டத்துக்குச் சென்றதால் சேறு கலந்த தண்ணீரையே பெற முடிகிறது.
இதனால் கொடிகாமம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க காவல்துறை மற்றும் நிர்வாக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர்.