குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது.
சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர்.
கிராம சேவையாளர் பருத்தித்துறை பிரதேசசெயலர் ஆழ்வாப்பிள்ளை சிறிக்கு தகவல் வழங்கியதையடுத்து பிரதேச செயலாளர் பருத்தித்துறை பிரதேச சபைத்தலைவர் அ.சா அரியகுமாருடன் தொடர்பு கொண்டு பிரதேச சபை தண்ணீர் பவுசர்கள் எடுத்துச்செல்லப்பட்டு சபை ஊழியர்கள் தண்ணீரைப்பாய்ச்சி தீயை அணைக்க சுமார் இரண்டு மணி நேர போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீயை அணைக்காது போனால் வல்லிபுரக்கோவிலுக்கு கிழக்கே உள்ள பனை வடலிக்கு தீ பரவி அருகில் உள்ள சவுக்கங்காட்டுக்கு பரவி பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.