இந்திய மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மே முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு 2019ஆம் ஆண்டுக்குள் இலவச எல்.பி.ஜி. இணைப்பு வழங்குவதாகும்.
விறகு போன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்களை வீட்டுக்குள் சமையலுக்குப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தால் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுவதாக டெல்லி ஐஐடி நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் வீட்டுக்குள் உருவாகிற காற்று மாசுபாட்டை முற்றிலுமாகத் தடுத்துவிட்டால் சுமார் 18.7 கோடி பேர் சுத்தமான காற்றைச் சுவாசிப்பார்கள் என குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமையலுக்கு அடுப்பு எரிக்கப் பயன்படுத்தப்படும் நிலக்கரி, விறகுகள், மண்ணெண்ணெய் விளக்குகள் ஆகியவை வீட்டுக்குள் உருவாகிற காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உஜ்வாலா திட்டத்தின் பயனாய் வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசுபாடு குறைந்து ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்பு தடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மின் இணைப்புத் திட்டமான தீன் தயாள் உபத்யாய் கிரமின் ஜோதி யோஜனா மற்றும் உஜ்வாலா திட்டங்களால் ஒட்டுமொத்த காற்று மாசுபாடும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்து.
இந்த ஆய்வு டெல்லி ஐஐடியின் வளிமண்டல அறிவியல் துறை, கலிபோர்னியா பெர்க்லே பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான அர்பன் எமிசன்ஸ் இணைந்து மேற்கொள்ளப்பட்டு அமெரிக்க இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது