இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பகளை மேற்கொண்டவர்கள் தற்கொலைதாரிகள் எனவும், தற்கொலைத் தாக்குதல்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட பகுதிகளிலும் மேலும் மூன்று குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார். இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 190 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்புவின் தெமடகொட பகுதியில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, குண்டு வெடித்ததில் மூன்று காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.