யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யபப்ட்ட நபர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பு சம்வங்களை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வந்தது. தீடிரென ஊரடங்கு அமுலுக்கு வந்ததால், யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறந்திருந்தோர், பல்வேறு தேவைகளுக்காக நகர் பகுதிக்கு வந்திருந்தோர் அவசர அவசரமாக வீடு திரும்பினார்கள். அதனால் யாழ் நகர் பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு சன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அந்நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் பயண பொதியுடன் ஒருவர் நடமாடியுள்ளார்.
அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் யாழ், காவற்துறை நிலையத்திற்கு தகவல் வழங்கினார்கள். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தமையால் காவற்துறையினர் சந்தேகத்தில் கைது செய்தனர்.
கைது செய்யபப்ட்ட நபரிடம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, தான் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் வேலை தேடி யாழ் நகருக்கு வந்ததாகவும், யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் காலை வேலை கேட்டு சென்றதாகவும், யாரும் வேலை தராததால், மீண்டும் திருகோணமலைக்கு செல்லவதற்காக தீர்மானித்து பேருந்துக்காக காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது கூறிய தகவல்கள் மற்றும் அவரது அடையாளங்களை காவற்துறையினர் உறுதிப்படுத்திய பின்னர் அவரை விடுவித்துள்ளனர். அதேவேளை இன்றைய தினம் காலை முதல் மத்திய பேருந்து நிலையத்தில் காவற்துறையினர் விசேட அதிரடி படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதிபடுத்திய விசேட அதிரடி படையினர் அந்நபரை பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.