நாட்டின் சில இடங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மூவர் கொண்ட விசேட விசாரணை குழுவொன்றை நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சரவை செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோர் இந்த விசேட விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
பல அப்பாவி உயிர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாரிய தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் மற்றும் பின்னணி பற்றியும் குறித்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய வேறு காரணிகள் குறித்தும் கண்டறிந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.