இன்று நள்ளிரவு 12 மணி முதல் பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்பான சட்ட விதி அவசர கால சட்டதிட்டத்தின் கீழ் நாளைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கூடிய தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமாணி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே நேரம் நாளைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களையும் உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்துள்ளதுடன், இச் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளார்.
உள்நாட்டு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல்களின் பின்னால் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ள காரணத்தினால், அவற்றை ஒழிப்பதற்காகவே இவ்வாறு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதே நேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்பு திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பாதுகாப்பு துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதே நேரம் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.