Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…

by admin

தமிழ் சிவில் சமூக அமையம்

Tamil Civil Society Forum

23 ஏப்பிரல் 2019
தமிழ் சிவில் சமூக அமையம்.


கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறான 21.04.2019 அன்று கிறிஸ்தவ ஆலயங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை இட்டு தமிழ் சிவில் சமூக அமையம் தன்னுடைய வன்மையான கண்டனத்தை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்கின்றது. அத்துடன் இச்சம்பவங்களினால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. உயிர் இழந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக வேண்டுதல் செய்வதுடன், காயமடைந்தவர்களுக்கு விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களிற்குப் பின்னர் நடைபெறும் இந்த சம்பவம் இத்தீவின் முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தக் கூடியதும் சிக்கலாக்கக் கூடியதும் என நாம் அஞ்சுகிறோம். வுரலாற்று ரீதியாக ஏற்கனவே சமூகங்களுக்கிடையில காணப்படும்; பீதியையும் சந்தேகத்தையும் அச்ச உணர்வையும் கூர்மைப்படுத்தக் கூடிய சம்பவமாக இது அமைந்து வீடும் என்பதற்கான ஆரம்ப சான்றுகளை நாம் சமூக வலைத்தளங்களில் நடைபெறும் உரையாடல்களில் அவதானிக்கலாம். இவையே தாக்குதலாளிகளின் நோக்கம் என்பது இலகுவில் ஊகிக்கக் கூடிய ஒன்றாகும். 30 வருட கால இன முரண்பாட்டின் வடுக்கள் மறையாதிருக்கும், அதற்கான முறையான சமூக, அரசியல் புரிதலை நோக்கி நாம் நகர மறுக்கும் இச்சூழலில் இந்த தாக்குதல் இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான உள் முரண்பாடுகளை மேலும் சிக்கல் ஆக்கக் கூடும்.

சமூகங்களாக நாம் இந்த அச்சத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பது எமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளியாக்கி நகர்வோமெனில் இத்தீவில் மனிதத்துவமான எதிர்காலத்திற்கான வாய்ப்பு மீண்டுமொரு முறை குழி தோண்டி புதைக்கப்படும். அதனை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் இல்லாமல் அரசும் இலங்கையின் அனைத்து இன, மத சமூகங்களும் உள்ளன என்பதே கடினமான உண்மை. நாம் இச்சூழலை பொறுப்பாகக் கையாளதவிடத்து நாம் மிக மோசமான காலகட்டத்தை நோக்கி நகர்கின்றோம் என்ற புரிதலோடு மிகுந்த நிதானத்தோடும் குறுகிய நலன்களுக்கு அப்பாலும் தூர நோக்கோடும் செயற்பட வேண்டுமென அரசியல், சிவில் சமூக, மதத் தலைவர்களை நாம் வினயமாக வேண்டி நிற்கின்றோம். மேலும் இந்த நெருக்கடிக்கான பதிலை தேசிய பாதுகாப்பு என்ற அடைப்புக்குள் தேடுவோமாயின் இந்நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான சமூகங்களே அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என்பதனை அரசுக்கு எமது அனுபவத்தில் இருந்து ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

‘தனக்கென்று வாழாமல் பிறருக்கென்று வாழுங்கள்’ என்ற ஈஸ்டர் தினத்தின் அழைப்பு சமயங்களுக்கும் இன, மொழி, சாதி பேதங்களுக்குமப்பால் சென்று இதயங்களை வருடட்டும். மனித நேயத்துடன் மனிதத்துவத்தில் வாழ தமிழ் சமூக சிவில் சமூக அமையம் அனைவரையும் அழைக்கின்றது. நமது தனித்துவ அடையாளங்கள் பேதங்கள் அல்ல. அவை மற்றவரை புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் அவர்களின் தனித்துவத்தை மதிக்கவும் மனித நேயத்தில் நம்மை உயர்த்தும் கொடைகள் என்பதை உணர்ந்து செயல்படுவோம். பரந்த மனமே விரிந்த ஞானம்.

அருட்பணி வீ. யோகேஸ்வரன் ரூ கலாநிதி. கு. குருபரன்
இணைப்பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More