குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்றிரவு புதன்கிழமை சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது. பொதிகளுடன் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாகனத்தில் வந்திறங்கி கோட்டைக்குள் நுழைந்தனர் என காவல்துறை அவசர பிரிவு 119இற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது சிறப்பு அதிரடிப் படையினர், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதேவேளை முன்னதாக நேற்றிரவு 8 மணிக்கு கோட்டைக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலரின் நடமாட்டம் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் 30 நிமிட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் அங்கிருந்து வெளியேறியிருந்ததுடன் சந்தேகத்துக்கு இடமாக அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவித்திருந்தனர். .
இந் நிலையில் மீளவும் இரவு 9.30 மணியளவில் காவல்துறை அவசர பிரிவுக்கு தொலைபேசி மூலம் கோட்டை பகுதிக்குள் பொதிகளுடன் சிலர் செல்வதாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து, கோட்டைக்குள் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு பின்புறமாக நிறுத்திவைக்கப்பட்ட கார் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது அந்தக் காரில் களுத்துறையைச் சேர்ந்தவர் ஒருவர் இருந்துள்ளார். அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். #globaltamilnews #jaffnaroundup #Srilanka #EasterSundayAttackLK