Home இலங்கை துயர் பகிர்வோம் சமூக ஒற்றுமைக்காக ஒன்றிணைவோம் – அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு…

துயர் பகிர்வோம் சமூக ஒற்றுமைக்காக ஒன்றிணைவோம் – அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு…

by admin

23 ஏப்ரல் 2019, மட்டக்களப்பு


ஈஸ்டர் ஞாயிறு காலையில் கொச்சிச்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கச்செய்த குண்டு வெடிப்பிலிருந்து மாலை 4 மணி வரையுள்ள 7 மணித்தியாலங்களில் 290 மரணங்களை ஏற்படுத்தி 500 இற்கும் மேற்பட்டோரைக் காயமடையச் செய்த, தலைநகரிலும் அதன் அண்டிய பகுதிகளிலும் மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு நகர் மத்தியில் உள்ள சியோன் தேவாலயத்திலும் நிகழ்ந்த 9 தொடர் குண்டுவெடிப்புகள் எமது நாடு முழுக்க பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

எமது நாட்டில் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் இறப்பினால் பாதிக்கப்பட்டு துயரிலுள்ள அனைவருக்கும் ஆதரவையும் கிழக்கைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பில் கொல்லப்பட்ட சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் அனைவரதும் ஆத்ம சாந்திக்காக எமது பெண்கள் கூட்டமைப்பு பிராத்திப்பதோடு அவர்களது குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் எமது மனப்பூர்வமான இரங்கலையும்; ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய மனித நாகரீகத்தை மறுதலிக்கின்ற இந்த கொடுர தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது.

கிறிஸ்தவ சமயம் இனத்துவப் பிளவுகளின்றி எல்லா இன மக்களையும் ஒன்றிணைக்கின்ற மார்க்கமாகும். இவ்வாறான அழகிய போதனையை வழங்குகின்ற சமயத்தின் திருநாளில் நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலானது இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்;த்தி உள்ளது. இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளில் உயிர் இழந்தவர்களில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் பறங்கியர்கள் என அனைத்து இன மக்களும் அடங்குகின்றனர். இத் தொடர் குண்டு வெடிப்பானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் இச்சம்பவத்தின் சூத்திரதாரிகள் தொடர்பான பல்வேறு
சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இத்தாக்குதலின் தொடரில் இன முறுகல்கள் ஏற்படாத வண்ணம் மக்களை வழிநடாத்துமாறு அரசாங்கத்தை வேண்டிக்கொள்கின்றோம்.

அத்தோடு சகல இனத்தவர்களும் கலந்து வாழும் கிழக்கில் இத்தகைய தாக்குதல் இடம்பெற்றமைக்கான பிண்ணனி என்ன என்பதையும்; ஆழ்ந்து சிந்திக்குமாறு கரிசனையுள்ள சமூக ஆர்வலர்களையும் சமயத் தலைவர்களையும் தொண்டு நிறுவனங்களையும் மற்றும் ஊடகவியலாளர்களையும் நாம் வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்.

ஏற்கனவே நைந்துபோயிருக்கும் இனத்துவ உறவுகள் மேலும் பிளவு படாமலிருக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வமதத் தலைவர்களும் நிறுவனங்களும் விரைவில் எம்மத்தியில் பரவிவரும் இந்த ஐயம் கொண்ட சூழ்நிலையை கட்டுப்படுத்த முன் வருவார்கள் என திட்டவட்டமாக நம்புகின்றோம். வேறு வேறு இனத்தை மதத்தை நாம் சார்ந்திருந்தாலும் பெற்ற பிள்ளைகளையும் உடன் பிறந்த சகோதரர்களையும் சகோதரிகளையும் பெற்றோர்களையும் இழந்து தவிக்கும் உள்ளங்களின் இழப்பின் வலியினை ஆழமாக புரிந்து கொள்ள முடிகின்றது.

80களிலிருந்து கிழக்குக் கரையில் ஓடிய இரத்தத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் நாங்கள். மேலதிகமான ஒடுக்குமுறைச் சட்டங்கள் உருவாக்கப்படுவது இத்தகைய நிகழ்வுகளுக்குத் தீர்வாக அமையாது என நாம் திடமாக நம்புகின்றோம். மனிதாபிமான ரீதியிலான எமது உறவுகளும் ஆதரவுகளுமே முரண்பாட்டிற்கான நீண்டகால தீர்வாக அமையும. கிழக்கில் மீண்டும் அமைதிக்குறைவோ இனத்துவ நெருக்கடிகளோ அன்றாட வாழ்வின் முடக்கமோ ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு அனைத்து சமூக மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

 தெற்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டோருக்கு எமது அஞ்சலி.
 அவர்களது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எமது அரவணைப்பு
 இனத்துவ நட்புகளை வளர்க்கவும் சகோதரத்துவத்தை பாதுகாக்கவும் ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.#eastersundayattacklk #Women’s #CoalitionforDisasterManagement #WCDM

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More