Home இலங்கை “எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK..

“எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம்” FCSOK..

by admin

காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால்
25.04.2019 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை

எம் தாய் நாடான இலங்கை தாங்கொண்ணாத பெரும் துயரை எதிர்கொண்டுள்ள ஒரு தருணம் இது. நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களுக்கு எமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும், இன்னும் சில வெளிநாட்டு அப்பாவி மக்களும் உயிரிழந்த பெரும்சோகத்தை எம் நாடு எதிர்கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு ஆளாகிய அத்தனை உயிர்களையும் , இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு துன்பங்கொண்டிருக்கும் உயிர்களையும் நினைத்து, எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம். அவ்வுயிர்களுக்காகவும் அவர்களை இழந்த குடும்பத்தாருக்காகவும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதற்காய் இவ்வறிக்கையினை வெளியிடுகிறோம். சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம்.

இலங்கை முஸ்லிம்கள் எப்போதும், சமாதானத்தை விரும்புவரக்ளாகவும் நாட்டிற்கு விசுவாசமனவர்களாகவும் இருந்துள்ளனர். எமது மக்கள் பள்ளிவாயலில் தொழுதுகொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டபோதும், எங்கள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டபோதும், சொந்த நிலத்தில் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டபோதும் அவர்கள் அமைதியாகவும் சமாதனமாகவுமே எதிர்வினையாற்றியுள்ளனர். அப்போது நாங்கள் எமது நாட்டிற்கெதிராகவோ, நாட்டு மக்களுக்கெதிராகவோ செயற்படவில்லை. வன்முறையை கையிலெடுத்து செயற்படவில்லை.

கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் கடந்த யுத்த காலங்களில் மிக இக்கட்டான, துன்பகரமான நிலைகளின் போது கூட இந்த நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள் மட்டுமல்லாது, சகோதர பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமூகங்களுடன் நல்லுறவை மீள ஏற்படுத் துவதில் தாமதமின்றி செயற்பாட்டார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.

ஆனால், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு பிரதேசத்து கிறிஸ்தவ தேவாலயங்ளிலும் பிரசித்த ஹோட்டல்களிலும் இடம்பெற்ற அன்மைய குண்டுத்தாக்குதல்கள் எம்மீது அபகீர்த்தியை ஏற்படுதியுள்ளன. நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம். ஒருபடி மேலாக, மிகச் சொற்ப எண்ணிக்கையான ஒரு சில தீவிரவாத சக்திகள் காத்தான்குடியிருந்தும் இப்பயங்கரவாத செயற்பாட்டில் தொடர்புற்றிருப்பதாக கேள்விப்படுகையில் ஒருவித மன உளைச்சலையும் நாம் உணர்கிறோம்.

காத்தான்குடி அதன் வரலாற்றின் எந்தக் கட்டத்திலும், இவ்வகையான தீயசக்திகளை ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ இல்லை. இத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் ஸஹ்ரான் ஹாஸிமி என்பவர் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் கல்லூரியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஒரு மாணவன். அவரது புறழ்நடத்தை காரணமாக அவர் கல்லூரி நிர்வாகத்தால் 2005 இல் விலக்கி அனுப்பட்டார்.

அதன் பின்னர் அவர் சுயமாக தனது தீவிரவாத தூண்டல் பேச்சுக்களைத் நடாத்தி வந்தார். காத்தான்குடியின் மிக முக்கிய அமைப்புக்கள் அவரைக் கண்டித்து, தீவிரவாத வெறுப்புப் பேச்சை நிறுத்துமாறு வலியுறுதினர். இச்செயற்பாட்டைத் தொடரவேண்டாமென காத்தான்குடி மக்கள் சார்பில் அவர் மீது அழுத்தமாக வேண்டுகோள் விடுத்தனர். மேலும் அவனது பிரச்சார நிலையத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கான அனுமதி கொடுக்கவெண்டாமென்றுகூட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டன

2017 இல் ஸஹ்ரானுடைய தீவிரப் பேச்சுக்கள் காரணமாக வெடித்த வன்முறைகள், குழு மோதல்கள் காரணமாக அவரது தீவிரவாத செயற்பாட்டு சகாக்கள் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு மாஜிஸ்ரேட் நீதிபதியால் 6 மாதமளவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டாரகள். அவ்வேளையில் சஹ்ரான் இப் பிர்தேசத்தைவிட்டு தப்பியோடி ஒழிந்திருந்தான், ஆனாலும் அண்மைய இந்த துக்ககர நிகழ்வு வரையும் அவன் கைது செய்யப்படாமலிருந்தமை கவலையளிப்பதாயுள்ளது.

மறைவில் ஒரு அடையாளம் காணப்படாத பிரதேசத்தில் இருந்துகொண்டு, தன் விஷமப்பிரச்சாரத்தை சமூக வலத்தளங்கள் ஊடாகத் தொடர்ந்தான். நாட்டின் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக அமைவதாக அத்தகைய தீவிரவாத சிந்தனையுள்ள பேச்சுக்கள் அடையாளம் காணப்பட்டபோது, நாங்கள் பாதுகப்பு அதிகாரிகளுக்கு அவை குறித்து தெரிவித்திருத்தோம். எத்தனையோ முறைப்பாட்டுப் பத்திரங்கள் பல பொறுப்புவாய்ந்த சமூகத்தின் முக்கியஸ்தர்களால் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனாலும் அவனது செயற்பாடுகளை நிறுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இப்படியொரு புறக்கணிப்பு நிலை, அவனைக் கைது செய்யாமை என்பவற்றை எம்மால் புரிந்து கொள்ள முடியாமலும் கவலையளிப்பதாகவும் உள்ளது.

இப்பயங்கரவாதத்தின் கடூரம் பற்றி நாங்கள் எவரும் சரியாக கணிப்பிட்டுக்கொள்ள தவறிவிட்டதன் காரணமாகவும், பயங்கரவாதிகளது மிகக் கவனமான திட்டமிடல்களையும், கூட்டுச்சேர்க்கைகளையும் எம்மால் சரியாக விளங்கிக்கொள்ளமுடியாமல் போய்விட்டதன் காரணமாகவுமே இன்றைய நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என்றே நாங்கள் எண்ணுகிறோம்.

இப்போது அவன் நம் எல்லோருக்கும் ஒரு பெரும் அபாயமாய் மாறிவிட்டான். அவன் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இது போன்ற மிலேச்சத்தங்கள், தீவிரவாத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இன்னும் நடைபெற்றுவிடாமல் தடுக்க நாம் மிகக் கவனாமகவும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டிய தேவையிருக்கிறது. உலகின் பல பாகங்களில் செயற்பட்டுவரும் ஒரு தீவிரவாத அமைப்பு இத்தாகுதல்களுக்கு உரிமை கோரியுள்ள நிலையில் எமக்கு இன்னும் மேலதிகமான கவனம் தேவை. இவ்வகையான அசாதாரண சூழலினை இன்னும் சில சமூக விரோத சக்திகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சமூகங்களுக்கிடையில், இன மோதல்களைத் தூண்டிவிட்டு நாட்டின் இன ஒற்றுமைக்கும் இன ஐக்கிய சகவாழ்விற்கும் தீங்கு விளைவிக்கலாம்.

பொறுப்புவாய்ந்த சிவில் சமூக நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கை சமூகத்திற்கு ஒரு செய்தியைக் கூறிக் கொள்ள நாங்கள் விரும்புகின்றோம். இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்க மாட்டார்கள். அத்தோடு ஒரு அமைதியான இலங்கையை
உருவாக்க என்றும் பாடுபட ஆயத்தமாக உள்ளார்கள். சமாதானத்தையும் சக வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்தமாக உள்ளோம்.

இன்று அவதியுறுகின்ற எமது கிறிஸ்தவ சகோதரர்களின் இன்றைய மனோநிலை அவர்களுடைய வலிகளை நாங்கள் நன்று உணர்ந்து கொள்கிறோம். மரணித்தவர்களினது குடும்பங்களுக்காகவும் தற்போது வைத்தியசாலைகளில் முடங்கிக் கிடக்கின்ற சகோதரர்களுக்காகவும் இறைவனை வேண்டுகின்ற அதேவேளை, கிறிஸ்தவ சமூகம் இத்தகைய இக்கட்டான நிலையிலும் கூட தனது சமூகக் கட்டுக்கோப்பையும் உயரிய மனிதப் பண்புகளையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை நன்றியுடன் அவதானிக்கின்றோம்.#eastersundayattacklk #fcsok #Federation #civijsociety #organizations #kattankudy

எம்.பீ.எம். பிர்தௌஸ் (நழீமி)
தலைவர்
எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர்
செயலாளர்

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran April 26, 2019 - 2:26 pm

“இது போன்ற மிலேச்சத்தங்கள், தீவிரவாத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இன்னும் நடைபெற்றுவிடாமல் தடுக்க நாம் மிகக் கவனாமகவும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டிய தேவையிருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்க மாட்டார்கள். அத்தோடு ஒரு அமைதியான இலங்கையை உருவாக்க என்றும் பாடுபட ஆயத்தமாக உள்ளார்கள். சமாதானத்தையும் சக வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்தமாக உள்ளோம்”.

எதிர்கால தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்கும் நோக்குடன் காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் கலந்துரையாடல்களை நடத்த முடியுமா? இதற்கு உதவக்கூடிய சில தகவல்களும் எண்ணங்களும் கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

A. குண்டு தயாரிப்பு:
1. வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
2. வெல்லம்பிட்டியவில் உள்ள செப்புத் தொழிற்சாலையில் அவை தயாரிக்கப்பட்டுள்ளன.

B. தாக்குதல்காரர்கள்:
1. தற்கொலைத் தாக்குதலை ஒன்பது உள்நாட்டு முஸ்லிம்கள் நடத்தியுளர்கள்.
2. செப்பு தொழிற்சாலையின் உரிமையாளரும் தாக்குதலை நடத்தியுளர்.
3. மற்ற ஒருவர் 2016 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விருதைப் பெற்றவர்.

C. தாக்கப்பட்ட இடங்கள்:
1. தமிழர்கள் பெரிய அளவில் வரும் 3 கிரிஸ்துவர் தேவாலயங்கள்.
2. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடிய அளவு தங்கும் 3 பிரபல விடுதிகள்.

D. தாக்குதல் நாளும் நேரமும்:
1. இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருநாள்.
2. தேவாலயங்கள் முழுமையாக தமிழ் பக்தர்களுடன் நிரம்பியிருந்த வேளை.
3. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடிய அளவு விடுதியில் இருந்த நேரம்.

E. பாதிக்கப்பட்ட மக்கள்:
1. கொல்லப்பட்ட 253 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்.
2. 13 வெளிநாடுகளில் இருந்து வந்த 36 பேர் கொல்லப்பட்டனர்.
3. சில சிங்கள மக்களும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
4. பலர் காயப்பட்டு சிகிச்சை பெற்றுகிறார்கள்.

F. தாக்குதலின் நோக்கம்:
1. தமிழர்களை பயமுறுத்தவா?
2. கிறிஸ்தவர்களை பழிவாங்கவா?
3. சக்தி வாய்ந்த அமைப்பு என்று காட்டவா?
4. சிங்களவர்களுக்கு எச்சரிக்கை செய்யவா?
5. வெளிநாட்டு சக்திகளின் நலனுக்கு உதவவா?
6. கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தவா?
7. நிலம் அபகரிக்க மற்றும் மதமாற்றம் செய்யவா?
8. முஸ்லீம் ஊர்காவல் படை நடந்தது போல் நடக்கவா?
9. பொல்லுகள் வாள்களோடு வந்து மக்களை பயமுறுத்தவா?
10. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இன் ஆட்சியை அமைக்கவா?
11. ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையை முஸ்லிம்கள் மத்தியில் திணிக்கவா?
12. உலக ஐ.எஸ்.ஐ.எஸ்.இன் அங்கீகாரத்தை பெற்று வளங்களை பெறவா?
13. மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு உறுப்பினர்களை சேர்க்கவா?

G. சிலரின் மனப்பான்மை:
1. பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்பு செயலாளரும் மஹிந்தாவை ஆதரிக்கின்றார்களா?
2. தவ்பிக் ஜமாத் அமைப்பை புலனாய்வுத் துறை பயன்படுத்தியதா? கோத்தபாய பாதுகாத்தாரா?
3. தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்பதால், தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையா?
4. எதிர்காலத்திலும் தமிழர்களை தாக்க முஸ்லீம்களை பயன்படுத்தலாம் என அரசு அமைதி காத்ததா?
5. சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல்களால் இறந்தவர்களை பற்றி கவலைப்படவில்லையா?
6. இந்த சம்பவங்களை பயன்படுத்தி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றலாம் என மஹிந்த கருதுகிறாரா?
7. வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை எளிதாக்க தற்கொலை குண்டுத்தாக்குதலை அரசாங்கம் அனுமதித்ததா?
8. தமிழ் பேசும் மக்களை மேலும் பிரித்து பகைவர்களாக்கி தாங்கள் லாபம் அடைய தாக்குதலை அனுமதித்தார்களா?

H. எதிர்கால தாக்குதலைத் தடுக்க, சவால்களாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும்?
1. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும்.
2. அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்கும் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி பின்பற்ற வேண்டும்.
3. பெளத்த, சிங்கள, பேரினவாத, மேலாதிக்க சிந்தனையும் நடைமுறையும் கூடிய விரைவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
4. இலங்கை மக்கள் மத்தியில் நல்லிணக்கம் பற்றி விழிப்புணர்வை உருவாக்கி அதை அமுல்படுத்த மக்களை தூண்ட வேண்டும்.
5. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஏனையோர்கள் தங்கள் பங்கை விரைவாக செலுத்த வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More