உதித்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் புதிய பிளவுகளை ஏற்படுத்தக் கூடும்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…
இலங்கையில் உதித்த ஞாயிறன்று நடந்த படுகொலைகளுக்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) பொறுப்பேற்றுள்ளது. தேவாலயங்களையும் நகர விடுதிகளையும் இலக்குவைத்து ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 48 மணித்தியாளத்திற்கு மேல் சென்ற பின்பாகவே இத்தாக்குதலிற்கு உரிமைகோரப்பட்டுள்ள நிலையில், அது குறித்து இன்னமும் சரிவர ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனினும் அரசாங்கத்தால் இந்த உரிமைகோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது. வெகு குறைவாக அறியப்பட்ட “தேசிய தௌபீத் ஜமாத்” என்ற அமைப்பு அல்லது அதிலிருந்து வெளியேறிய அமைப்பே இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற கொலைகார அமைப்பின் உள்ளூர் பங்காளி என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
இதில் சந்தேகத்திற்கிடமில்லாத விடயம் என்னவெனில், 8 ஆண்களும் 1 பெண்ணும் எனக் கூறப்படும் இந்தத் தற்கொலைக் குண்டுதாரிகள் அனைவரும் இலங்கை முஸ்லீம்கள் என்பதுடன், இவர்களில் பெரும்பான்மையானோர் நடுத்தர மற்றும் உயர்- நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும், வெற்றிபெற்ற வணிகர்களாகவும், தொழிற்பண்பாட்டாளர்களாகவும், பொறுப்பற்ற இளவயதினராகவல்லாமல் நடுத்தர வயதுள்ள பெற்றோர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதாகும். அவர்கள் நல்லாக வாழ்வதற்கு அவர்களிடம் எல்லாம் இருந்தும் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று தாமும் சாவதையே அவர்கள் தெரிவுசெய்திருக்கின்றனர் (இறப்புகள் 350 இற்கு மேற்பட்டதென ஆரம்பத் தகவல்களை இலங்கை அரசு மறுசீரமைத்துள்ளது).
இந்தக் குண்டுதாரிகளின் இத்தகைய தெரிவானது அவர்கள் சார்ந்த இலங்கையின் முஸ்லீம் சமூகத்தின் நடத்தைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் தாக்குதலுக்குட்படும்போது கூட, அவர்கள் அரசியல்ரீதியாக ஊக்குவிக்கப்பட்ட வன்முறைகளுக்குள் இறங்குவதில்லை. மற்றும் அவர்கள் சிங்கள பௌத்த பிக்குகளாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தாலும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றனர். இப்படியாக, கடைசியாக இடம்பெற்ற முஸ்லீம்களுக்கெதிரான கலவரமாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டியிலுள்ள திகண என்ற இடத்தில் இடம்பெற்ற சம்பவம் இருக்கின்றது. ஆனால், முஸ்லீம்கள் இதற்குப் பதிலடியாக வன்முறையில் இறங்கவில்லை. அவர்களுக்கெதிரான ஒவ்வொரு தாக்குதல்களின் பின்பும் அவர்கள் மறுபடியும் மீண்டெழுந்து தமது வழமையான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். ஆனால், இதற்காக அவர்களுக்குப் பாராட்டுகளோ அல்லது குறைந்தபட்ச நீதியோ கிடைப்பதில்லை. மாறாக, உலகின் எந்தப் பாகத்திலாவது எந்தவொரு இஸ்லாமிய பயங்கரவாதிகளால்/ தீவிரவாதிகளால் நடைபெறும் ஒவ்வொரு குற்றத்தையும் அவர்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் “இஸ்லாமோபோபியா” இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இருக்கிறது. அவர்கள் அரசியல் வன்முறைகளைத் தெரிவுசெய்யாவிட்டாலும், ஏனையோருடைய குற்றங்களைச் சுமப்பவர்களாக இலங்கை இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டார்கள்.
பழிவாங்கும் வன்முறையைத் தவிர்ப்பது என்பது இலங்கை முஸ்லீம்களுக்கும் இலங்கை கிறீஸ்தவர்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. உதித்த ஞாயிறன்று நடந்த இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள் இப்படியாக இந்த இலங்கை கிறிஸ்தவர்களையே இலக்குவைத்துள்ளனர். இலங்கை முஸ்லீம்கள் போலவே இலங்கை கிறிஸ்தவர்களும் வன்முறைத் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து உள்ளாகின்றார்கள். முஸ்லீம்கள் போலவே அவர்களும் திருப்பத்தாக்குவதில்லை. எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும், முஸ்லீம்கள் போலவே கிறிஸ்தவர்களுக்கும் குறைந்தளவு நீதியும் பாதுகாப்பும் மட்டுமே கிடைக்கும் அல்லது அதுவும் கிடைக்காது.
இந்த ஒரேவித அனுபவமானது இந்த இரு சமூகங்களிற்கிடையிலும் கடந்த காலங்களில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் ஒரு சமூகம் தாக்கப்படும் போது, மற்றைய சமூகம் அனுதாபத்தைத் தெரிவிப்பதும் ஆதரவு வழங்குவதும் வழமை. இப்படியான ஒரு நிகழ்வு இந்த உதித்த ஞாயிறுப் படுகொலையைச் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு நடந்தது. அனுராதபுரத்திலுள்ள “ஆதர சேவன” (அன்பின் காப்பகம்) என்கின்ற மெதடிஸ் திருச்சபையால் நடத்தப்படும் சமூக நிலையம் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு மாறாக, பொலீசார் இதில் தலையிட்டு இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கும் மறுத்தது. கொழும்பிலுள்ள சிரேஸ்ட உத்தியோகத்தர்களால் பாதுகாப்பு வழங்குமாறு உள்ளூர் பொலீசிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, தேவாலயத்திற்கு வெளியே நின்று பாதுகாப்பு மட்டும் வழங்கினர்.
இப்படியாக இடம்பெற்ற இந்த வன்முறை மற்றும் அதிகாரத்தின் பாரபட்சம் என்பனவற்றிற்கு எதிராக மெதடிஸ் திருச்சபையால் ஒரு அமைதியான விழிப்புணர்வுப் பேரணி ஏப்ரல் 19 அன்று அதாவது பெரியவெள்ளி தினத்தன்று கொழும்பில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், முஸ்லிம் மதகுருமார்கள் கிறிஸ்தவ மதகுருமார்களுடன் தோளோடு தோளாக நிற்பதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படமானது ஏதோ நீண்ட காலத்தின் முன்பு தொலைந்த உலகின் நினைவுச் சின்னம் போல தோன்றுகிறது.
தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இலங்கைக்குப் புதியனவல்ல. இதை விடுதலைப் புலிகள் நன்கு பயன்படுத்தியிருந்தனர். ஆனால், உதித்த ஞாயிறன்று நடந்த இந்தப் படுகொலை ஒரு பெரிய திருப்பமாக பதியப்படுகிறது. ஏனெனில், இலங்கையில் மத உந்துதலில் நடைபெற்ற முதலாவது தற்கொலைத் தாக்குதலாக இது இருக்கிறது. மற்றும் இதிலுள்ள கொடூரமான முரண் என்னவென்றால், இலங்கையில் அரசியல்ரீதியாக மிகவும் அமைதியான இரண்டு சமூகங்கள் இதில் உள்ளடங்கியுள்ளது.
ஒரு வேற்றுமை முரண்பாடு
ஒரு அரசியல் வரலாற்று வெற்றிடத்தில் நடைபெற்றதால் இலங்கையில் உதித்த ஞாயிறன்று நடந்த படுகொலைகள் தனித்ததன்மையுள்ளதாக இருக்கிறது. அல்கெய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது அதன் கிளை அமைப்புகள் ஒரு மதச் சமூகத்தை இலக்கு வைக்கும்போது, மதப்பிளவுகள் ஏலவே இருக்கும் இடங்களையே இலக்குவைப்பது வழமையாக இருந்தது. அவர்கள் இருக்கின்ற பிளவுகளையே சுரண்டினார்கள். அப்படியாக அவர்கள் செய்யும் போது மேலும் பிளவுகளை அதிகரிப்பார்கள்.
கடந்த ஆண்டுகளில் நடைபெறுவனவற்றைப் பார்க்கும் போது, பௌத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலேயே மதரீதியான பிளவுகள் இலங்கையில் அதிகமாக இருந்திருக்கிறன. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மிகக்குறைந்தளவான முரண்கள் இருந்திருக்கின்றன. ஆனால், முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் எந்தவொரு முரண்களும் ஏற்படவில்லை.
உலகின் ஏனைய பல பகுதிகள் போலவே, இலங்கையிலுள்ள முஸ்லிம்களும் தீவிரவாதத்தின் காற்றில் அகப்பட்டுள்ளனர். குறிப்பாக, சவுதிஅரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளால், வகாபிசம் மற்றும் சலாபிசம் ஆகியவை தீவிரமாக முஸ்லீம் சமூகத்திற்குள் புகுந்துள்ளது. ஆனால், இந்தத் தீவிரவாதம் என்பது அரசியல் விடயங்களிலும் பார்க்க சமூக விடயங்களில் மேலும் பிணைக்கப்பட்டுள்ளது. இது “தன்னாட்சி” என்பதிலும் “அபாயா” என்பதில்தான் அக்கறை காட்டுகிறது. விளைவாக, பௌத்தர், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் ஒப்பிடுகையில், தீவிரவாதிகள் முஸ்லிம் சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் மற்றும் மிதவாதிகள் பற்றி அக்கறைகாட்டியுள்ளார்கள். தேவாலயங்கள் இலக்குவைக்கப்பட்டது போல் அல்லாமல், உயர்தர விடுதிகள் மீதான குண்டுத்தாக்குதலானது, தீவிர பழமைவாதச் சிந்தனைகளின் விளைவிலிருந்து நடந்திருக்கின்றது.
தற்கொலைக்குண்டுதாரிகள் உருவாக்குவதற்குக் கடினமான ஆயுதங்கள் ஆவார்கள். ஒரு மனிதனைத் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் தற்கொலை மனநிலைக்குக்கொண்டுவருவதற்கு நேரமும் முயற்சியும் சந்தர்ப்பமும் தேவைப்படும். தாம் வெறுப்பதற்கு ஒரு காரணமும் இல்லாத குழுவின் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தும் பலபேரை உருவாக்குவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலங்கையில் வெற்றிகண்டுள்ளது. இது அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியாக இருப்பதுடன் உண்மையில் இது அச்சுறுத்தும் ஒன்றாக இருக்கின்றது. “வரலாற்றுரீதியாக, ஒரேயொரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கே பல விநியோக வலையமைப்புத் தேவைப்படும். ஆட்களை உள்ளீர்த்து அவர்களைத் தீவிரப்படுத்தி தற்கொலைக்குண்டுதாரியாகப் பராமரிப்பது, பயிற்றப்பட்ட குண்டு தயாரிப்பாளர்கள் மற்றும் இலக்குகளைக் கண்காணிப்பதற்கான செயற்பாட்டாளர்கள் என பலர் அடங்கிய வலையமைப்புத் தேவைப்படும். நிபுனத்துவம் மற்றும் அமைப்புரீதியான வலையமைப்பு உள்ளவர்களால் மட்டுமே நிகழ்த்தக் கூடிய ஒரு வல்லமை தேவைப்படுகின்ற செயலாகும்” என ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் புர்ஸ் கொல்மன் குறிப்பிட்டுள்ளார். இப்படியொரு பாரிய செயலை எப்படி இந்த அமைப்புச் செய்தது? நவீன தொடர்பாடல் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி தொலைவிலிருந்து இது செய்யப்பட்டதா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்ட ஒரு உள்ளூர் குழுவினால் திட்டமிடப்பட்டு இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டதா? இந்த இரண்டு சாத்தியங்களும் இலங்கையை மட்டுமல்ல, பிராந்தியத்தையும் அதற்கு மேலும் அச்சுறுத்துகின்றன.
ஒரு பயங்கரமான புதிய பிளவு
“ஈழப்போரின் போது வகுப்பு முரண்பாடுகளை விஞ்சியதாக இனமுரண்பாடுகளே தீர்மானகரமானதாகியது.” என நியூட்டன் குணசிங்க கூறியுள்ளார். பாரம்பரிய மதப் பிளவுகள் கூட இன அடையாளத்திற்குள் மூழ்கின. தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் அவர்கள் சார்ந்த மத அடிப்படையில் நோக்கப்படாமல் சிங்களவர்களாகவே நோக்கப்பட்டார்கள். ஒரு இலங்கையன் அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட இரீதியாகவும் எங்கிருக்கிறான் என்பதில் இனம் என்பது மிதமிஞ்சிய தீர்மானகரமானதாக இருந்தது.
போரின் பின்பான காலத்தில், ஒரு புதிய ஆபத்துத் தோன்றியது. இனம் என்பது மிதமிஞ்சிய தீர்மானகரமானதாக இருந்தது போய் மதம் என்பது மிதமிஞ்சிய தீர்மானகரமாகியது. இந்த ஆபத்து சுயமாகத் தோன்றவில்லை. இலங்கையிலுள்ள முஸ்லீம்களை ஆபத்தானவர்களாகக் காட்டும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஒருமுகப்பட்ட முயற்சிகள் மூலமே இது ஏற்பட்டது. தீவிர சிங்கள பௌத்த தேசிய அமைப்பான பொதுபலசேனாவின் எழுச்சி இந்தச் சூழமைவிலேயே நடந்தது. பொதுபலசேனா மற்றும் ஏனைய கடும்போக்குச் சிங்கள பௌத்த அமைப்புகளின் வன்முறையைத் தூண்டும் அரசியலானது முஸ்லீம்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட பல தாக்குதல்களை நோக்கி இட்டுச் சென்றது. தென்னிலங்கையிலுள்ள அலுத்கம என்ற இடத்தில் 2014 இல் நிகழ்ந்த வன்முறையே இவற்றுள் பெரிய வன்முறையாக இருந்தது.
இந்த நிலைமைக்குத் தீர்வுகாண்பதாக உறுதியளித்தே சிறிசேனா-விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கம் மதரீதியான பதட்டத்தை அதிகரிக்க எந்த வேலையும் செய்யவில்லை என்றாலும் (முந்தைய அரசாங்கத்தைப் போல் அல்லாது), சமரசத்தை ஊக்குவிக்கவும் அல்லது ஒரு மிதமான சூழலை ஏற்படுத்தவும் போதுமான காத்திரமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அனைத்து மதங்களிலுமுள்ள மிதவாதிகளையும் முற்போக்குச்சக்திகளையும் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் பதிலாக, மதத்தீவிரவாதம் மீது கண்டுகொள்ளாத ஒரு அணுகுமுறையை இந்த அரசாங்கம் கையாண்டது. ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்து, தீவிரவாதத்திற்கு தந்திரமான ஊக்குவிப்பை இந்த அரசு வழங்கியது. தீவிரவாதிகள் மத இடங்களை ஆக்கிரமிப்பது. தங்களது சகிப்புத்தன்மையற்ற நம்பிக்கைகளுக்காக மேலும் மேலும் நிலங்களைக் கோருவது மற்றும் மத அடிப்படையில் சமூகங்கள் தீவிரவாதிகளால் இலக்குவைக்கப்படும் போது மிகக் குறைந்தளவிலான நடவடிக்கைகளையே அதன் மீது எடுத்தல் என்றவாறாக இந்த அரசாங்கம் நடந்துகொண்டது. பௌத்த மிதவாதிகளைக் கைவிட்டது போல, முஸ்லீம் மிதவாதிகளையும் இந்த அரசாங்கம் கைவிட்டது. இந்தக் கோழைத்தனத்திற்கான விலையை முழு இலங்கையும் இன்று செலுத்த வேண்டியிருக்கின்றது.
இலங்கை இலகுவாக இலக்குவைக்கப்படக் கூடியதாக இருக்கின்றதால் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் நடத்த இலங்கையைத் தெரிவுசெய்ததாக வாதிடப்படுகிறது. இலகுவான இலக்கிலும் இலகுவான இலக்கு என்பதனாலா தேவாலயங்களைத் தாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் முடிவுசெய்தது? மொத்தத்தில், சிறிசேனா-விக்கிரமசிங்க ஆட்சியின் வருகைக்குப் பின்பும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. 2019 இல் மட்டும் அப்படியான 40 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட தாக்குதல்கள் குறித்து விடுவிக்கப்பட்ட பல எச்சரிக்கைகளை எப்படி இலங்கையின் பாதுகாப்புத்துறை அலட்சியம் செய்தது என்பதாகவே பல பதிவுகள் எழுதப்படுகின்றன. சனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதலில் உளவமைப்புகளின் அலட்சியத்தன்மையானது குற்றஞ்சாட்டப்படுகிறது. அது நிச்சயமாக ஒரு காரணம். ஆனால் அது மட்டுமல்ல. பௌத்த விகாரைகளையோ அல்லது அரச நிறுவனங்களையோ இலக்குவைத்துத் தாக்குதல் நடைபெறப்போகின்றதென உளவுத்தகவல்கள் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பிற்குக் கிடைத்திருந்தால் இதேபோல் அக்கறையில்லாமல் இருந்திருப்பார்களா? இலக்குவைக்கப்பட்டது தேவாலயங்கள் மீது என்பதனாலா தொடர்ச்சியான எச்சரிக்கைகள் மீது பொதுவாக பொலீசும் குறிப்பாக தேசிய புலனாய்வு அமைப்பும் தேவையானளவு எதிர்வினையாற்றாமல் சோர்வாக நடந்துகொண்டார்கள்?
விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட 10 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத இவ்வேளையில் இந்த உதித்த ஞாயிற்றுப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குண்டுத் தாக்குதல்களிற்குப் பின்னரான நிலைமை சரியாகக் கையாளப்படாதுவிட்டால், இலங்கையில் புதிய முரண்பாடுகள் தோன்றும். தொடர்ச்சியான விழிப்பு இல்லாவிட்டால், முஸ்லீம்களை இலக்குவைத்து வன்முறைக் கும்பல் வன்முறையில் ஈடுபடுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
இந்தக் குண்டுதாரிகள் ஒரு வேற்றுமையான முரண்பாட்டை இலங்கை மண்ணில் ஏற்படுத்திவிட்டார்கள். ஒரு புதிய மத மோதலாக இந்த மத முரண்பாடு திரும்புவதைத் தடுத்து நிறுத்த ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.
பழிவாங்கும் வன்முறை ஒன்று வெடிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த விடயத்தினை அரசாங்கம் இதுவரை கையாண்டுள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் கண்ணியமான மற்றும் பொறுப்பான எதிர்வினை இதற்கு உதவியது. இந்தக் குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்வதற்கு பாரிய உதவிகளை முஸ்லீம் சமூகம் கூடச் செய்துவருகிறது.
அலட்சியம் மற்றும் பாராபட்சம் காரணமாக சமூக அமைதியைக் காப்பது இன்னமும் கடினமான பணியொன்றாகவே இருக்கின்றது. இந்த ஆபத்தை இரண்டு சம்பவங்கள் விளக்குகின்றன. பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழ்த் தேசிய ஊடக நிறுவனம் சார்ந்த ஒருவரை பி.பி.சி ஊடகம் நேர்காணல் செய்ததால், பி.பி.சி இனது தொடர்பாளராக கொழும்பில் இருக்கும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு ஊடகவியலாளர் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை எதிர்வினைகளை இணையவாயிலாக முகங்கொடுத்தார்.
மற்றைய நிகழ்வில், பயங்கரவாதச் சந்தேக நபர்களின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் பொலிசார் பொதுமக்களிடத்தில் பகிரங்கமாக வெளியிட்டார்கள். அதில் ஒரு புகைப்படம் பெயர் குறிப்பிடப்பட்ட சந்தேக நபருடையது இல்லை. இது இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்கப் பிரஜையான ஒரு முஸ்லீம் பெண்ணின் புகைப்படமாகும். அந்த மாணவி ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து, போலீஸ் மன்னிப்புக் கேட்டுள்ளது. கிஜாப் அணிந்திருக்கும் இரு பெண்களுக்கிடையில் இந்தப் பொலீசால் வேறுபாடுகாணத் தெரியவில்லையென்றால், பழமைவாத முஸ்லீம்கள், சன்னி, சியாஸ் மற்றும் அகமதியாவிலிருந்து எப்படி வன்முறை நிகழ்த்திய குற்றவாளிகளை அடையாளங்காணும் சிக்கலான பணியை இந்தப் பொலீசார் செய்வார்கள்? முன்முடிவுகளானவை மத மோதலை நோக்கித் தள்ளுமென்பதையே இந்த இரு சம்பவங்களும் சுட்டி நிற்கின்றன.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இஸ்லாமிய தீவிரவாத எழுச்சிக்குமான தொடர்பினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சாதாரண முஸ்லீம்கள் மீது தாக்கும் போது, அவர்களுடைய பாரம்பரிய தலைவர்கள் மற்றும் அவர்களின் அமைதியான அரசியலில் முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இதுவே, தீவிரவாதத்திற்கு இடங்கொடுக்கிறது. எனவே, சிங்கள பௌத்த தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது இன்றைக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது.
உதித்த ஞாயிறன்று நடந்த படுகொலைகளுக்குப் பின்னர் நம்பிக்கை அருகிவிட்டது, ஆனால் நம்பிக்கை இறந்துவிடவில்லை. இந்தக் குண்டுத்தாக்குதலில் இறந்த 13 வயதுச் சிறுமியின் இறந்தவீட்டில் இதற்கான ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றுத் தெரிந்தது. தனது அம்மாவுடன் உதித்த ஞாயிறு வழிபாட்டில் ஈடுபடும் போது இந்தச் சிறுமி இறந்துள்ளாள். இவளது அப்பா ஒரு முஸ்லீம் என்பதால், இவளது இறுதிச் சடங்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. கிறிஸ்தவப் பெண்கள் சிலர் இதனால் அந்தப் பள்ளிவாசலிற்கு வந்திருந்தார்கள் என “கிறவுண்ட் வியூஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு ஓதித் தொழுகை முடிவடைந்த பின்னர் உடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அந்தப் பெயர் அறியாத சிறுமியின் இறுதிச் சடங்கில் பொதுமக்களின் அந்த உணர்வு படுகொலைகளால் உருவாக்கப்பட்ட இரத்தக்களரிப் பிளவுகளை வென்று நின்றது. இந்த மனிதாபிமான மனநிலையை இலங்கை பெற்றால், எதிர்காலம் இறந்தழியாது. #isis #IslamicState #Iraqand #Syria #TISARANEE GUNASEKARA #SriLankaBackonthebrink #EasterSundayattack