உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களை அடுத்து அமெரிக்க அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் உதவி வருகிறது என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைய தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட குறுகிய கால, குறிப்பான நோக்கங்களை பூர்த்தி செய்தல் பற்றியும் குற்றவாளிகளை நீதிக்கு முன்பாக கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அமெரிக்க நிபுணர்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஒத்துழைப்பானது இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு அணிகளின் பெரியளவிலானதும் நீண்ட கால அடிப்படையிலானதுமான பிரசன்னத்தை சுட்டிக்காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அட்டூழியங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் நடைமுறைகளில் மாற்றங்களை அமுல்படுத்தவும் எதிர்காலமொன்றையும் இலங்கை எதிர்பார்க்கும் நிலையில், எமது சொந்த கடந்த கால பெருந்துயரங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டும் உள்நாட்டு அதிகாரிகளுடனான எமது தற்போதைய ஒத்துழைப்பின் ஊடகவும் அதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரமான தாக்குதல்களானது ஒரு சில தனிநபர்களின் செயலே தவிர ஒட்டுமொத்த சமூகமொன்றினால் மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இந்த அட்டூழியங்களை கண்டிப்பதில் அனைத்து பின்னணிகளையும் மத நம்பிக்கைகளையும் கொண்ட இலங்கையர்கள் ஒன்றுபட்டிருந்தனர். ஒற்றுமையே பயங்கரவாதத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த பதிலாகும் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
#america #srilanka #Ambassador #eastersundaylk # Alaina Teplitz