Home இலங்கை “தேவையில்லாமால் எம்மை அவமானப்படுத்தாதீர்கள்”

“தேவையில்லாமால் எம்மை அவமானப்படுத்தாதீர்கள்”

by admin

 

யாழ்ப்பாண ஊடகங்கள் யாழ்ப்பாணத்திலே வாழும் முஸ்லிம் மக்கள் குறித்து இழிவான முறையிலும், பொறுப்பற்ற வகையிலே செய்திகளை வெளியிடுவது குறித்து நேற்று யாழ்ப்பாணத்திலே இடம்பெற்ற சர்வமதங்களையும் உள்ளடக்கியவர்களின் ஒரு கூட்டத்திலே ஒரு முஸ்லிம் மனிதர் தனது கருத்துக்களையும், ஆதங்கத்தினையும் வெளியிட்டார். அவருடைய கருத்துக்களை துளசி முத்துலிங்கம் ஆங்கிலத்திலே பதிவு செய்திருந்தார். துளசி முத்துலிங்கத்தின் பதிவின் தமிழாக்கத்தினை இங்கு பகிருகிறேன். 

Mahendran Thiruvarangan முகநூல்

ஊடகங்கள் செய்திகளை அறிவிக்கும் முறை தொடர்பிலே தயவு செய்து பொறுப்புடன் செயற்படும் படி கேட்டுக்கொள்ள நாம் விரும்புகிறோம். தேவையில்லாமால் எம்மை அவமானப்படுத்தாதீர்கள். எங்கள் மீது சந்தேகத்தினையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் ஆதாரமற்ற செய்திகளைத் தயவு செய்து உங்கள் ஊடகங்களிலே பிரசுரிக்காதீர்கள்.

யாழ்ப்பாணத்திலே இருக்கும் ஒரு பள்ளிவாசலின் பிரதம நிருவாகியாக நான் இருக்கிறேன். முஸ்லிம்கள் செறிந்து வாழும் எமது பிரதேசத்தினை விசேட அதிரடிப் படையினர் நேற்று முந்தினம் சுற்றி வளைத்தார்கள். எல்லா வீடுகளையும் அலசி மிகவும் நுணுக்கமாகத் தேடுதலினை மேற்கொண்டார்கள்.

1990இலே நாம் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் நாங்கள் நாங்கள் இன்னமும் எங்களின் வீடுகளை மீளவும் கட்டிக்கொண்டு இருக்கிறோம். தங்களுக்கு என்று வீடுகள் இல்லாத எமது சமூகத்தவருடன் நாம் எமது இருப்பிடங்களைப் பகிர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.

கடந்த வாரத்திலே பிரச்சினை வெடித்தவுடன் தமது குடும்பங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலே கொண்டிருக்கும் பல முஸ்லிம் மாணவர்களும், முஸ்லிம் வியாபாரிகளும் தங்களது அறைகளைப் பூட்டி விட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது குடும்பங்கள் வாழும் இடங்களுக்குச் சென்றார்கள்.

அதிரடிப்படையினர்/இராணுவத்தினர்/பொலிஸார் எமது வீடுகளுக்கு வந்த போது நாங்கள் வாடகைக்கு கொடுத்திருந்த அறைகளுக்கான திறப்பு எம்மிடம் இருந்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பதனை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவ்வாறான அறைகளை நாம் உடைத்துத் திறக்க வேண்டி இருந்தது.

சந்தேகத்துக்கு இடமான எதுவுமே எமது வீடுகளிலே கண்டெடுக்கப்படவில்லை. சோதனை நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி இருந்தோம். அதன் பின்னர் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தனர். சப்பாத்துக் கால்களுடன் அவர்கள் பள்ளிவாசலை மொய்க்கத் தொடங்கினர். எங்களுடைய வழிபாட்டுத் தலத்தினுள் சப்பாத்துக் கால்களுடன் வருவது எமக்கு மிகுந்த வேதனையினை அளிக்கிறது, சப்பாத்தினைக் கழற்றி விட்டு வாருங்கள் என நான் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அவர்கள் மிகவும் முரட்டுத்தன்மையான முறையிலே தொடர்ந்தும் நடந்துகொண்டனர். ஏதாவது ஒரு விடயத்தின் அடிப்படையிலே எம்மைக் குற்றஞ்சாட்டுவதனை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயற்ப்பட்ட வண்ணம் இருந்தனர். பள்ளிவாசலின் ஒரு களஞ்சிய அறையிலே அவர்கள் தேயிலைப் பொதிகளைக் கண்டெடுத்தனர். கண்டியினைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் அவரின் தேயிலையினைப் பாதுகாத்து வைப்பதற்கு அந்தக் களஞ்சிய அறையிலே அவருக்கு இடம் கொடுத்திருந்தோம். 1990இலே நாம் இந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டத்தின் பின்னர், நாம் இன்னமும் யாழ்ப்பாணத்துடன் எம்மை மீளவும் ஒன்றிணைக்கும் பணியிலே ஈடுப்பட்டிருக்கிறோம். இதற்கு எமக்கு எந்த விதமான வெளித் தரப்ப்பு ஆதரவும் கிடைப்பதில்லை. நாமே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம்.

ஈஸ்டர் தினத்திலே தாக்குதல் இடம்பெற்ற போது கண்டியினைச் சேர்ந்த வியாபாரியும் இங்கு தனது அலுவல்களை மூடிவிட்டு குடும்பத்தினரிடம் சிறிது காலத்துக்குச் சென்றுவிட்டார். சிறு வியாபாரிகள் என்ற வகையிலே எமது வாழ்வாதாரங்கள் இந்த வகையிலே பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சென்று சிறு பொருட்களை விற்பதே எமது தொழில். ஆனால் இன்று நாம் அந்தத் தொழிலினைச் செய்வதற்கு மிகவும் பயப்படுகிறோம். பொலிஸார் தேயிலைப் பவுடரினைக் கண்டெடுத்தனர். நாங்கள் அது வெறும் தேயிலை தான் என்று திரும்பத் திரும்பச் சொன்ன போதும், அவர்கள் தாங்கள் ஏதோ வெடிபொருட்களைக் கண்டுபிடித்தது போல நடந்து கொண்டதுடன், மேலதிக விசாரணைக்காக எம்மை பொலிஸ் ஜீப்பினுள் ஏற்றினார்கள். இதற்கிடையில் இந்த விடயம் உடனடியாக ஊடகங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. நானும் ஏனைய பள்ளிவாசல் தலைவர்களும் மந்தைகள் போல இழி சொற்களுடன் ஜீப்பினுள்ளே ஏற்றப்பட போது ஊடகங்கள் எமது முகங்களைப் புகைப்படமும், காணொளியும் எடுக்கத் தொடங்கினர். நாங்கள் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே பொலிஸ் நிலையத்தில் இருந்தோம். பத்து நிமிடங்களிலே அங்கு வந்த அரச சுகாதார அலுவலர் அங்கு வந்து அந்தப் பொதிகளிலே இருந்தது தேயிலை தான் என உறுதிப்படுத்தினார். ஆனால் ஊடகங்கள் இதனைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளும், தமிழ் ஊடகங்களும் என்னையும் மற்றவர்களையும் மிகவும் மோசமாக இழிவுபடுத்தும் வகையிலே படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். சந்தேகத்திற்கு இடமான பொருட்களை பள்ளிவாசலிலே வைத்திருந்தமைக்காக நாம் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலே அதிகம் விநியோகிக்கப்படும் பத்திரிகையான உதயன் இப்படித் தலையங்கம் போட்டிருக்கிறது: “மாநகர சபை உறுப்பினர் என்று சொல்லி தப்பிக்க முயன்றார் மௌலவி”

அவர்கள் இரண்டு விடயங்களிலே பிழை விட்டிருக்கிறார்கள். நான் ஒரு மௌலவி அல்ல. நான் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைக்காகவே நான் அழைத்துச் செல்லப்பட்டேன். ஆம், நான் ஒரு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்பதனைப் படையினருக்குச் சொன்னேன். எம்மைப் பயங்கரவாதிகள் என்ற வகையில் நடாத்த வேண்டாம் என்பதனையும், மதிப்பான பதவிகளை முன்போ அல்லது தற்போதோ வகித்த/வகிக்கின்ற நாம் சமூகத் தலைவர்களாகவும் இருக்கிறோம் என்பதனையும், எம்மை மூர்க்கத்தனமாக நடாத்தத் தேவையில்லை என்பதனையும் சுட்டிக்காட்டும் வகையிலேயே, நான் முன்னர் மாநகர சபையிலே உறுப்பினராக இருந்த விடயத்தினை அங்கு குறிப்பிட்டேன். ஆனால் அதனைப் படையினர் கேட்கவில்லை. ஆனால் அந்த விடயத்தினைத் தூக்கிப்பிடித்து உதயன் பத்திரிகை ஒரு அருவருப்பான தலையங்கத்தினைப் பிரசுரித்துள்ளது.

ஊடகங்களைக் கூடுதலான‌ பொறுப்புச்சொல்லும் வகையிலே செயற்பட வைப்பதற்கு ஏதாவது வழிகள் இருக்கின்றனவா? உங்கள் மத்தியிலே வாழும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பினைத் தூண்டும் நடவடிக்கைகளைத் தயவுசெய்து நிறுத்துங்கள். பயங்கரவாதத்தினை அழிப்பதற்கு எல்லா உதவிகளையும் செய்வதற்கு நாம் சம்மதமாக இருக்கிறோம். உங்களைப் போலவே நாங்களும் நொறுங்கிப் போய் இருக்கிறோம். எங்களை எதிரிகளாக்கும் செயற்பாடுகளை நிறுத்துங்கள்.

ஆங்கிலத்திலே துளசி முத்துலிங்கத்தினால் எழுதப்பட்ட பதிவினை வாசிக்க: https://m.facebook.com/story.php?story_fbid=2372162179670746&id=1552476364972669&_ft_=mf_story_key.10156486592608517%3Atop_level_post_id.10156486592608517%3Atl_objid.10156486592608517%3Acontent_owner_id_new.601008516%3Aoriginal_content_id.2372162179670746%3Aoriginal_content_owner_id.1552476364972669%3Athrowback_story_fbid.10156486592608517%3Apage_id.1552476364972669%3Aphoto_id.2372143653005932%3Astory_location.4%3Aattached_story_attachment_style.photo%3Apage_insights.%7B%221552476364972669%22%3A%7B%22page_id%22%3A1552476364972669%2C%22role%22%3A1%2C%22actor_id%22%3A601008516%2C%22psn%22%3A%22EntStatusCreationStory%22%2C%22attached_story%22%3A%7B%22role%22%3A1%2C%22page_id%22%3A1552476364972669%2C%22post_context%22%3A%7B%22story_fbid%22%3A2372162179670746%2C%22publish_time%22%3A1556549740%2C%22story_name%22%3A%22EntStatusCreationStory%22%2C%22object_fbtype%22%3A266%7D%2C%22actor_id%22%3A1552476364972669%2C%22psn%22%3A%22EntStatusCreationStory%22%2C%22sl%22%3A4%2C%22dm%22%3A%7B%22isShare%22%3A0%2C%22originalPostOwnerID%22%3A0%7D%7D%2C%22sl%22%3A4%2C%22dm%22%3A%7B%22isShare%22%3A0%2C%22originalPostOwnerID%22%3A0%7D%2C%22targets%22%3A%5B%7B%22page_id%22%3A1552476364972669%2C%22actor_id%22%3A601008516%2C%22role%22%3A1%2C%22post_id%22%3A2372162179670746%2C%22share_id%22%3A0%7D%5D%7D%7D%3Athid.601008516%3A306061129499414%3A2%3A0%3A1556693999%3A7136594336611382000&__tn__=%2AsH-R

துளசி முத்துலிங்கம்  – தமிழாக்கம் – Mahendran Thiruvarangan முகநூல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More