நாட்டில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டு, அவசர கால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும், யாழ்.தென்மராட்சி பகுதிகளில் வாள் வெட்டு குழுக்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
தென்மராட்சி கெற்போலி மேற்கில் நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த க. கனகலிங்கம் (வயது 31) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
உழவு இயந்திரத்தில் தமது முகங்களை துணிகளால மறைத்து கட்டியவாறு வந்த 15க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்த உடமைகளை அடித்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளது.
அந்த சத்தம் கேட்டு அயலவரான கனகலிங்கம் அவ்விட்டிற்கு சென்ற போது அங்கிருந்த நபர்கள் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்தினர்.
குறித்த சம்பவங்களை அடுத்து ஊரவர்கள் திரண்டதும் தாக்குதல் கும்பல் தமது உழவு இயந்திரத்தையும் கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அதனை அடுத்து படுகாயமடைந்த நபரை ஊரவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து கொடிகாம பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , தாக்குதல் கும்பலால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதேவேளை குறித்த பகுதிக்கு அண்மையில் உள்ள பாலாவி எனும் பகுதியில் நேற்று மாலை சுமார் 30 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து வீதிகளில் நின்றவர்கள் உட்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது வாள் வெட்டுக்களை மேற்கொண்டதுடன் , கூரிய ஆயுதங்களால் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
அத் தாக்குதலில் முதியவரான தம்பிராஜா பொன்னுத்துரை (வயது 62)என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த 29ஆம் திகதி கெற்போலி மேற்கை சேர்ந்த கனகரத்தினம் நிரோசன் (வயது 21) எனும் இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு அவசர கால சட்டம் அமுலில் உள்ள நிலையில் கொடிகாமம் பகுதியில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.