173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில். தேடுதல்கள் சுற்றிவளைப்புக்களில் பள்ளிவாசல்களை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து சந்தி மொஹைதீன் ஜீம்மா பள்ளி வாசல் நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது பிரதேசத்தை இராணுவத்தினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது எமது பள்ளி வாசலில் தேடுதல் நடத்த வந்த போது , அவர்கள் பள்ளி வாசலுக்குள் சப்பாத்துக்களுடன் புகுந்தனர். அதன் போது நான் சப்பாத்துகளை கழட்டி விட்டு வருமாறு அவர்களிடம் கோரினேன். அவர்கள் அதனை கேட்கவில்லை. சப்பாத்துக்களுடன் உள்ளே வந்து பள்ளி வாசலை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர்.
பாதுகாப்பு தரப்பினர் அனைத்து முஸ்லீம் மக்களையும் சந்தேக கண்களுடன் பார்க்கின்றனர். அதனால் அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதுடன் , அவமதிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் சாதாரண முஸ்லீம் மக்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றது. தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் சாதாரண முஸ்லீம் மக்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் போக்கு எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது என மேலும் தெரிவித்தார்.
#jaffna #mosque #roundup #checking
Spread the love