குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் வாய் முறைப்பாடு பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து விசாரித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளதார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது ஒளிப்படம் முகநூலில் இருந்து தரவிறக்கப்பட்டு போலிக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இளைஞரிடம் வாய்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இளைஞரது ஒளிப்படத்தை அவரது முகநூலில் இருந்து தரவிறக்கம் செய்து அந்தக் கடிதத்தில் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
தேசிய தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்த சிலர் ஒருவருடத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது கொள்கைப் பரப்பில் ஈடுபட்டனர் என்ற தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இந்தப் போலிக் கடிதம் தொடர்பிலும் காவல்துறையினர் அதிக அக்கறை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#ChundikuliGirlsCollege #release #police