மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் தற்போது நாடு இயல்பு நிலைக்கு மீண்டுவரும் அதேவேளை, பாதுகாப்பு படையினரின் வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் பயங்கரவாத சவாலினை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதனால் தமது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி இலங்கைக்கு மீண்டும் வருகை தருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதி அனைத்து தூதுவர்களிடமும் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் சகல இன மக்களும் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை தான் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதோடு, அனைத்து முஸ்லிம் மக்களும் இச்சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியதில்லை என்பதோடு, அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்பவும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்குமான பொறிமுறையொன்று சமயத் தலைவர்களின் தலைமைத்துவத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களே இவ்வனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதான சவாலாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , இனவாதத்தையும் மத வாதத்தையும் பரப்பும் நோக்குடன் சிலர் சமூக ஊடகங்களின் வாயிலாக மேற்கொள்ளும் போலிப் பிரசாரங்கள் நாட்டில் அமைதியான சூழலைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தடையாக காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த வெளிநாட்டுத் தூதுவர்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் தெரிவிக்கப்படும் மக்களை பீதியடையச் செய்யும் பிரகடனங்களை உடனடியாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென தெரிவித்தனர். தொடர்ந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை பிரதானிகள் பதிலளித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியவர்களைக் கண்டறிவதற்காக உயர் நீதிமன்ற நீதியரசரைக் கொண்டதாக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை தற்போது தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைவாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை நாளை சட்டமா அதிபரிடம் முன்வைக்கவுள்ளதோடு, மேலும் ஒரு வாரத்தில் அது மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் வாழும் அகதிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி , உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த பெரும்பாலான அகதிகள் தற்போது எமது நாட்டில் தங்கியிருப்பதோடு, இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக அவர்களை வெகு விரைவில் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான உதவிகளை பெற்றுத்தருமாறு தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி, இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
#president #highcommisioners #refugees #tourist #banned