குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
‘இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது’ என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்.
யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் , காவல்துறை அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர்; இணைந்து நடாத்திய தேடுதலில் மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவ படம் , மாவீரர்களின் உருவப்படம் என்பன மீட்கப்பட்டன.
அது தொடர்பில் , மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு , பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோப்பாய் காவல்துறையினர் முற்படுத்தினார்கள்.
அதன் போது மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தனர். காவல்துறையினர் அதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான் மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாணவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர். அதன் போது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபப்ட்ட போது மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பினை விண்ணப்பம் செய்திருந்தனர்.
அது தொடர்பிலான கட்டளை இன்றைய தினம் புதன்கிழமை வழங்கப்படும் என நீதிவான் திகதியிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்றைய தினம் குறித்த வழக்கு கட்டளைக்காக எடுத்துக்கொள்ள பட்ட போது ‘இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது’ என கூறிய நீதிவான் பிணை விண்ணப்பத்தினை நிராகரித்தார்.
#jaffnauniversity #students #bail #rejected