157
நாட்டின் சுபீட்சத்தை வெளிச்சக்திகள் விரும்பவில்லை. அந்தச் சக்தியே பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இந்தச் சிறிய கும்பலை பயன்படுத்தியுள்ளது. அந்த சக்தியையே அடையாளம் காணவேண்டும். இச்சம்பவத்தை பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் கலாசாரத்தை அழிப்பதற்கு சிலர் முற்பட்டு வருகின்றார்களா என்ற சந்தேகம் முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து எழுந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற, கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;
நாட்டில் மதத்தின் பெயரால் மேற்கொண்ட இந்தத் தாக்குதலை சிறியதொரு கும்பலே மேற்கொண்டிருக்கின்றது. இந்த சிறிய கும்பலை பரவவிடாமல் தடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவர்களின் நோக்கம் என்ன? மார்க்கத்தில் இல்லாத விடயத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு, இவர்கள் மேற்கொண்ட இந்த தாக்குதல் செயலால் அவர்களின் உடலைக்கூட மார்க்கத்தின் அடிப்படையில் நல்லடக்கம் செய்ய முடியாத நிலைக்குச் சென்றுள்ளது.
விடுதலைப் புலிகள் தனிநாட்டு கோரிக்கையுடன் போரிட்டனர். அவர்களின் இயக்கத்தை அழித்தவுடன் விடுதலைப் புலிகளின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. என்றாலும், தற்போது குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இச்சிறிய கும்பலுக்குப் பின்னால் வெளிச்சக்தி இருப்பதைக் காண்கின்றோம். ஆகையாலும், முஸ்லிம் சமூகத்தில் இவர்களுக்கு ஆதரவாக பேசக்கூடியவர்கள் எவருமில்லை.
இஸ்லாமிய உலகத்தை உருவாக்குவதாகத் தெரிவித்து உள்நாட்டில் தனது குடும்பத்தை மாய்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு மடமைத்தனம் என்பதைக் காணலாம்.
இந்தக் கும்பலை யாரோ நன்கு பயன்படுத்தியிருக்கின்றார்கள். அதனை கண்டுபிடிக்க வேண்டும். மாறாக, நாட்டுக்குள் மாத்திரம் சோதனைகளை மேற்கொண்டு ஒரு சிலரை கைதுசெய்து, அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது.
நாட்டின் சுபீட்சத்தை வெளிச்சக்தி விரும்பவில்லை. அந்தச் சக்தியே இந்த சிறிய கும்பலை பயன்படுத்தியுள்ளது. அந்த சக்தியையே அடையாளம்காண வேண்டும். அதற்காக முஸ்லிம் சமூகம் உச்சகட்ட பொறுமையுடன் பாதுகாப்பு பிரிவுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை நெருக்கடிக்கு ஆளாக்கும் வகையில் நடத்த முற்படக்கூடாது. அவ்வாறான நிலையில் அவர்களும் விரும்பியோ விரும்பாமலோ வேறு திசைக்கு தள்ளப்படுவார்கள்.
அத்துடன் இந்தச் சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் கலாசாரத்தை ஒழிக்க சிலர் முற்பட்டு வருகின்றார்களா என்ற சந்தேகம் முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து எழுந்துள்ளது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதை நிறுத்தியுள்ள நிலையில் அவர்கள் தலையை மறைத்து ஏனைய அவர்களின் ஆடைகளை அணிந்து செல்லும்போது அதற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும்.
எனவே, நாட்டின் சுபீட்சத்தை விரும்பாத சர்வதேச வெளிச்சக்தியை அடையாளம்காண வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விரல் நீட்டிக்கொள்ளாமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
#RauffHakeem #muslims #ltte #identity
Spread the love