Home இலங்கை தமிழ் மக்களுக்கு சர்வதேச பாதுகாப்புத் தேவை – சி.அ.யோதிலிங்கம்..

தமிழ் மக்களுக்கு சர்வதேச பாதுகாப்புத் தேவை – சி.அ.யோதிலிங்கம்..

by admin


இலங்கைத் தீவையே உலுக்கிய குண்டு வெடிப்புகள் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்றுள்ளது. எட்டு இடங்களில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்புக்களில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளடக்கம். 45 சிறுவர்கள், 36 வெளிநாட்டவர்கள் உட்பட 350 ற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். 500 ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈராக், சிரியாவை மையமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய அரசு என அழைக்கப்படுகின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் இதற்கு உரிமை கோரியுள்ளது. தற்கொலைக் குண்டுதாரிகளின் ஒளிப்படங்களையும் மேற்படி இயக்கம் வெளியிட்டுள்ளது. குண்டுதாரிகளில் இலங்கை முஸ்லீம்களும் உள்ளடக்கம். சர்வதேச முஸ்லீம்களும் உள்ளடங்கியுள்ளார்களா? என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலக வலைப்பின்னலை வலுவாகக் கொண்ட ஒரு ஆயுத இயக்கம்.சிரியா – ஈராக் பிரதேசத்தில் சில பின்னடைவுகளைக் கண்டிருந்தாலும் சர்வதேச அளவில் இன்னமும் வலுவாக இருக்கின்றது. வேறு வேறு நாடுகளில் துணை அமைப்புக்களையும் உருவாக்கியுள்ளது. இலங்கையில் உருவாக்கிய துணை அமைப்புக்கு ‘தேசிய தௌஹீத் ஜமாத்’ எனபெயரிடப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அச்சுறுத்தல்கள் பற்றி சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளும், உள்நாட்டுப் புலானாய்வுப் பிரிவுகளும் எச்சரித்த போதும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும் இதுவிடயத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரையும் குற்றம் சாட்டுகின்றார். தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இந் நிகழ்வு இடம்பெற்றிருக்காது என்று கூறுகின்றார். சிறந்த புலனாய்வாளர்களை சிறையில் அடைத்தமைதான் காரணம் எனக் கூறுகின்றார். தன்னுடைய அரசியலுக்கு இந்நிகழ்வை இலாவகமாகப் பயன்படுத்துகின்றார்.

உலகில் முஸ்லீம்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்களை உலக முஸ்லீம்களின் ஒரு பகுதியாகவே காண்கின்றனர். உலக அளவில் முஸ்லீம் இருப்பு பாதுகாக்கப்படும் போது தமது இருப்பும் பாதுகாக்கப்படும் எனக் கருதுகின்றனர். உலகளவில் முஸ்லிம்களின் இருப்புக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அச்சுறுத்தலாகியிருப்பதால் அதன் பலத்தைத் தகர்ப்பது என்பதை முக்கிய கோட்பாடாக கொண்டுள்ளனர். ஜ.எஸ்.ஜ.எஸ் இயக்கத்தின் பிரதான கோட்பாடும் இது தான். அமெரிக்க தலைமையிலான மேற்குலகமும்இ இந்தியாவும் இந்தோ – பசுபிக் மூலோபாயத்தின் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது செல்வாக்கை வலுப்படுத்தும் கூட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கை இவ்மூலோபாயத்தின் கேத்திர இடமாக இருப்பதனால் தமது செல்வாக்கை வலுப்படுத்துவதில் அதீத அக்கறையுடன் செயற்படுகின்றன. இந்தச் செல்வாக்கினை தகர்த்தெறிவது தான் இக்குண்டு வெடிப்புக்களின் நோக்கமாகும். சுருக்கமாகக் கூறினால் இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட வல்லரசுகளுக்கிடையிலான புவிசார் அரசியல் போட்டியின் விளைவே இக்குண்டு வெடிப்புக்களாகும். இது வரை காலமும் உள்நாட்டு ஆயுத இயக்கத்திற்கு முகம் கொடுத்த இலங்கை தற்போது சர்வதேச அரசுகளின் ஆதரவுடன் செயற்படும் சர்வதேச ஆயுத இயக்கத்திற்கு முகம் கொடுக்கின்றது.

உலகில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்களின் உற்பத்தி நிலம் பாகிஸ்தான் தான். இன்னோர் உற்பத்தி நிலம் ஆப்கானிஸ்தான்.இவை இரண்டையும் மத்திய கிழக்குடன் இணைத்து அகன்ற இஸ்லாமிய வல்லரசினை உருவாக்கும் கனவும் ஜ.எஸ்.ஜ.எஸ் இயக்கத்தில் உண்டு. சவூதி அரேபிய போன்ற பலம் வாய்ந்த நாடுகள் இவ்வியக்கத்திற்கு நிதி மூலதனங்களை வழங்குகின்றன. உலகமெங்கும் வாழும் படித்த முஸ்லிம்கள் இவ்வியக்கத்திற்கு போராளிகளாக உள்ளனர். முஸ்லிம் தேசிய வாதிகளான சதாம் உசெயினதும் கடாபியினதும் அழிப்பும்இ ஒசாமா பில்லேடனின் கொலையும் இவ்வியக்கத்தை உசுப்பிவிட்டுள்ளது.

இலங்கை அரசு வல்லரசுகளை வெற்றிகரமாக சமாளித்தல் என்ற பெயரில் அனைத்து வல்லரசுகளும் இலங்கையை சூறையாட இடம் கொடுத்து இலங்கைத் தீவினை வல்லரசுகளின் போட்டிக்களமாக மாற்றியுள்ளது. தெற்கு சீனாவுக்கு,வடக்கு இந்தியாவுக்கு, கிழக்கு அமெரிக்காவிற்கும்,ஜப்பானுக்கும் என பங்கு போடப்பட்டுள்ளது. இவ்வல்லரசுகள் பொருளாதார முதலீடுகள் என கால் பதித்தாலும் அவற்றின் இலக்கு இராணுவ கேந்திர இடமாக வலுப்படுத்துவதுதான். மைத்திரி – ரணில் கூட்டரசு அமெரிக்க தலைமையிலான மேற்குலக – இந்தியக் கூட்டிற்கு அதிமேலான இடம் கொடுக்க முற்பட்டதால் இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது. இங்கு ரணில் – அமெரிக்க சார்பு நிலையில் நின்று சீனாவை சமாளிப்பதும், மகிந்தர் சீனா சார்பு நிலையில் நின்று அமெரிக்க – இந்தியக் கூட்டினை சமாளிக்க முற்படுவதும் அனைவரும் அறிந்ததே!

அமெரிக்க – இந்திய கூட்டின் இந்தோ – பசுபிக் மூலோபாயத்திட்டம் வெற்றியடையுமானால் முஸ்லீம் ஆயுத இயக்கங்களின் உற்பத்தி நிலங்களான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் நெருக்கடிகள் ஏற்படும். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உட்பட முஸ்லீம் இயக்கங்கள் இதனை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. இந்நிலையை மாற்றும் முகமாகத்தான் கடந்த வருட பிற்பகுதியில் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்று இடம்பெற்றது. அமெரிக்க – இந்தியக் கூட்டின் வலுவான செயற்பாட்டினால் அம்முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கோத்தபாயா வடிவில் மேலெழுந்த போது வழக்குகள் என்ற பெயரில் அமெரிக்கா அதற்கும் தடை போடுகின்றது. இத் தடைக்கு எதிரான பதிலடியாகவும் இக்குண்டு வெடிப்புக்ககைளக் கூறலாம். அமெரிக்கா கோத்தபாயாவை முடக்க, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் ரணில் தரப்பை முடக்க முயற்சிக்கின்றது. இக்குண்டு வெடிப்புக்களின் போது சிங்களத் தேசியவாதம் எழுச்சியடையாத வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களும் நட்சத்திர ஹோட்டல்களும் இலக்குகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. கிறிஸ்தவ – முஸ்லீம் வரலாற்றுப் பகையும், தேவாலயங்களின் மேற்கு சார்பு நிலையும், தமிழ்த் தேசிய ஆதரவு நிலையும், தேவாலயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

இக்குண்டு வெடிப்புக்களின் மைய ஊற்று இனப்பிரச்சனைதான். இதனைச் சாட்டாக வைத்துத்தான் அமெரிக்க – இந்திய கூட்டு இலங்கைத் தீவில் கால் பதிக்கின்றது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெளிவுபட வெளிப்படுத்தியுள்ளார். ‘இன மத ஏற்றத்தாழ்வுகள் இந்தத் தீவில் இருக்கம் போது அதனூடாக ஏற்படும் முரண் நிலைகளை சந்தர்ப்பவாத குழுக்களும் அந்நிய சக்திகளும் தமது நோக்கங்களை அடைவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்த முனைவார்கள் ஆகவே நிலையான சமாதான பூமியாக இத்தீவை மாற்றுவதற்கு எமது அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும் துணிச்சலுடன் முன்வரவேண்டும். எமது அரசியல் சாசனமும் சட்டமும் சகல இன மத சமூகங்களுக்கும் சமத்துவத்தையும், பாதுகாப்பையும் நல்கும் விதத்தில் மாற்றியமைக்கப்படல் வேண்டும். இதன் அவசியத்தை இத் தாக்குதல்கள் இன்று எமக்கு உணர்த்தியுள்ளன.’

விக்னேஸ்வரன் இந்தியாவை நோக்கியும் வேண்டுகோள்களை விடுத்துள்ளார். ‘2009ற்குப் பின்னர் இலங்கை ஊடாக அந்நிய சக்திகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களையும் இத்தாக்குதல்கள் கோடிட்டு காட்டுகின்றன. ஆகவே இந்தியா தனது நலனை மட்டும் கருத்திற் கொள்ளாமல் தனது பாதுகாப்பானது இலங்கைத்தீவின் உண்மையான அமைதியிலேயே தங்கியிருக்கிறது. என்பதைப் புரிந்து மதச்சார்பற்ற வடக்கு – கிழக்கு இணைந்த உச்ச அதிகாரம் கொண்ட ஒரு சமஸ்டிக் கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்தி தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஒரு தீர்வை கொண்டுவர முன்னின்று பாடுபட வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவிற்கு உணர்த்துகின்றன’ என தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

கொலையாளிகள் பற்றி மிகத் துல்லியமான தகவல்களை கைவசம் வைத்திருந்தது இந்தியாதான். இவ்வமைப்பு தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. அவர்களின் இருப்பிடம் தொலைபேசி இலக்கங்கள், அதன் தலைவர் மனைவியைச் சந்திக்கச் செல்லும் துல்லியமான நேரம் என்பவற்றையெல்லாம் வைத்திருந்தது. எல்லாத் தகவல்களையும் பாதுகாப்புத் தரப்புடன் பகிர்ந்திருந்தது. தேவாலயத் தாக்குதல்கள் பற்றியும் பகிர்ந்திருந்தது. எனவே இந்தியாவும், படைத்தரப்பும் தொடர்கண்காணிப்பில் இருந்தது என்றே கூறலாம். அமெரிக்காவுடனும் இந்தியா தகவல்களைகப் பகிர்ந்திருக்கலாம். எனவே இம் மூன்று தரப்புகளும் தத்தம் நலன்களிலிருந்து இந்நிகழ்வு நடைபெறுவதை விரும்பியிருக்கலாம் என சந்தேகிக்கவும் இடமுண்டு. படைத்தரப்பு தனது கட்டுப்பாட்டினை மீள கொண்டு வருவதற்காக விரும்பியிருக்கலாம். இந்திய – அமெரிக்க சக்திகள் மகிந்தர் தரப்பிற்கு உள்நாட்டு பூட்டு ஒன்றினை உருவாக்குவதற்கும் விரும்பியிருக்கலாம். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது இச்சக்திகள் விரும்பியது போல இங்கும் விரும்பியிருக்கலாம். மகிந்தர் தரப்புக்கும் தகவல்கள் தெரிவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. படைத்தரப்பிற்கும் அதற்கும் மிக நெருங்கிய உறவுண்டு. ஜனாதிபதி தேர்தலில் இலகுவாக வெற்றி யடையைக் கூடிய சூழல் உருவாகும் என்பதற்காக அத்தரப்பும் விரும்பியிருக்கலாம். தற்போது ரணில் தரப்பின் செல்வாக்கு மிக மோசமாக சரிந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மிக இலகுவாக மகிந்த தரப்பு வெல்லும். அவ்வாறு வென்றாலும் இந்திய – அமெரிக்க சக்திகளின் சுற்று வளைப்பின் கீழேயே அத்தரப்பு செயற்பட வேண்டிவரும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடு இந்தியாவினதும், அமெரிக்காவினதும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. இதனால் மகிந்தர் தரப்பு விரும்பாவிட்டாலும் அவை தமது இராணுவ, புலனாய்வு நடவடிக்கைகளுக்கான தளங்களை இலங்கையில் உருவாக்கும். அவ்வாறு உருவாக்குவதற்கான சர்வதேச சட்ட நியாயங்களும், தார்மீக நியாயங்களும் அவற்றிற்கு உண்டு. இதுதான் மகிந்த தரப்பிற்கான உள்நாட்டுப் பூட்டாக இருக்கப் போகின்றது. தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த உடனேயே இந்த நாடுகளின் புலனாய்வு நிறுவனங்கள் இலங்கையில் முகாமிடத் தொடங்கியுள்ளன. இம் முகாம்கள் நிரந்தரமாகவே இருக்கப் போகின்றது. அவை வெளியேறப் போவதில்லை. ஜெனீவா – மகிந்தருக்கு ஒரு சர்வதேச பூட்டாக இருந்தால் இந்த புலனாய்வு முகாம்கள்; உள்நாட்டுப் பூட்டாக இருக்கப் போகின்றது. இறைமை பற்றி மகிந்தர் தரப்பு இனி வாயே திறக்க முடியாது.

தமிழ் தரப்பின் நிலைதான் மிகவும் கவலைக்குரியது. தற்போதைக்கு இயல்பு நிலையும் இல்லை, நிலை மாறு கால நீதியும் இல்லை, அரசியல் தீர்வும் இல்லை. தன்னெழுச்சியாக இடம்பெறுகின்ற போராட்டங்களும் அமுக்கப்படப் போகின்றன. பழைய போர்க்கால வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய நிலை உள்ளது. தமிழ்த்தரப்பு இந்திய – அமெரிக்க சார்பு நிலை எடுத்துள்ளதால் ஐ.எஸ்.ஐஎஸ் இயக்கம் தமிழ் மக்களை பகைச் சமூகமாகவே கருதுகின்றது. குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் அதிகமானோர் தமிழ் கிறிஸ்தவர்களே! இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் எந்த நேரமும் தமிழ் மக்களுக்கு ஆபத்து வரலாம்.காணி விடுவிப்பு தற்போதைக்கு இல்லை. பாதுகாப்பு நியாயங்களை படைத்தரப்பு கூறி தமது இருப்பை நியாயப்படுத்தலாம். அரசியல் கைதிகளின் விடுதலையும் இல்லை. காணாமல் போனோர் விவகாரம் அப்படியே புதைக்கப்படும். ஜெனீவா அழுத்தங்களுக்கும் வாய்ப்பில்லை. அமெரிக்க – இந்திய சக்திகள் உள்நாட்டுப் பூட்டை உருவாக்கியுள்ளதால் ஜெனீவா பெரிதளவிற்கு இனி அவற்றிற்கு அவசியமில்லை.

இந்நிலையில் தமிழ்த்தரப்பு சர்வதேச சக்திகளிடம் சர்வதேசப் பாதுகாப்பைக் கோர வேண்டும். தமிழ்த்தரப்பின் அமெரிக்கா – இந்தியா நிலைப்பாட்டில்தான் ஆபத்து பன்மடங்கு பெருகியுள்ளது. எனவே தமிழ்த்தரப்பிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய – அமெரிக்க சக்திகளுக்கு உண்டு. எதிர்காலத்திலும் அவற்றிற்கு துணையாக இருக்கப் போவது தமிழ் மக்களே! வட கிழக்கினை ஐ.நா பாதுகாப்பின் கீழ் கொண்டு வரும்படி ஒரே குரலில் தமிழ் மக்கள் கோர வேண்டும். தமிழ் அரசியல் சக்திகள் தங்களது கட்சி, குழு முரண்பாடுகளை மறந்து ஐக்கியமாக கோராவிட்டால் வல்லரசுகள் இக்கோரிக்கையைக் கணக்கெடுக்கப் போவதில்லை.

குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக இலங்கை மட்டத்தில் ஓழுங்கான விசாரணை நடக்கப் போவதில்லை. சர்வதேசப் பாதுகாப்புப் பிரச்சினையும் தமிழ் மக்களுக்கான நீதியும் இதற்குள் அடங்குவதனால் சர்வதேச விசாரணையே இதற்குப் பொருத்தமானது. இதற்கான அழுத்தங்களையும் தமிழ்த் தரப்பு கொடுக்க வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரன் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இவையெல்லாவற்றிற்கும் முன் நிபந்தனை தமிழ் தரப்பின் ஐக்கியமே! தமிழ் அரசியல் கட்சிகள் தமது கட்சி நலன்களை இனிமேலாவது கைவிடுவார்களா? #eastersundayattackslk #joyhilingam

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More