205
முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை களையவும் இதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை நீக்கவும் தங்கள் தரப்பிலிருந்து போதிய விளக்கங்கள் தேவைப்பட்டால் அவற்றை வழங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அதற்கான கலந்துரையாடல்களுக்கு எப்பொழுதும் தயார்நிலையில் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இன்று (09) மென்டெரினா ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகத்தின் மத்தியில் பிழையாக சித்தரித்துக் காட்டுவதற்கான பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேவையில்லாமல் அடுத்த சமூகங்களை உணர்சிவசப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான தேடுதல்களைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சாதாரண குற்றங்கள் என வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டும். எல்லா குற்றங்களையும் ஒன்றாக்கி, முஸ்லிம் சமூகம் பயங்கரவாத்துக்கு தயாரகின்ற ஒரு சமூகமாக பொதுவெளியில் சித்தரிக்கப்படுகின்ற ஒரு அவநிலைக்கு நாங்கள் முகம்கொடுத்துள்ளோம்.
இந்த விடயத்தில் பாதுகாப்புத் தரப்பும் ஏனைய சமூகமும் நடுநிலைத் தன்மையுடன் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த ஊடக மாநாட்டை நாங்கள் நடாத்துகிறோம். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் தனது பூரண ஆதரவை வழங்கி வருகின்றது.
சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற, ஈனத்தனமான தாக்குதலில் ஈடுபட்ட இந்தக் கும்பலைப் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒருபோதும் தலையெடுக்க இடமளிக்கக்கூடாது. இந்தக் கும்பலை முற்றாக களையெடுப்பதற்கு முஸ்லிம் சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். நாங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம்
முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்துவாழும் இடங்களை மையப்படுத்தி நடைபெறும் இந்த தேடுதல் நடவடிக்கைகள், சிலநேரங்களில் மக்களை தேவையில்லாமல் அசெளகரியப்படுத்துகின்றன. கைப்பற்றப்பட்ட சாதாரண பொருட்களைக் கூட பயங்கரவாதத்துக்கு துணைபோன ஆயுதங்களாக காட்டப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதத்துக்கு துணைபோனவர்களாக காட்டுவது கண்டனத்துக்குரியது.
தேவையில்லாத பதற்ற நிலையையும் அச்ச உணர்வையும் உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்த எத்தனிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் இருப்பிடங்கள் தவிர, நாடுபூராகவுள்ள ஏனைய சமூகத்தினர் வசிக்கும் இடங்களில் இவ்வாறான தேடுதல் வேட்டைகள் நடந்தால் இதைவிட நூறு மடங்கு பொருட்கள் கைப்பற்றப்படலாம்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை ஏதோவொரு சக்தி பின்னின்று இயக்கியிருக்கிறது என்று எங்களால் நம்பமுடிகிறது. இதன் பின்னாலுள்ள மறைகரம் என்னவென்பது சரிவர கண்டறியப்பட வேண்டும்.
இந்த நாடு மிகப்பெரிய அச்சுறுத்துலக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவசரமாக இயல்புநிலைக்கு திரும்பவேண்டிய தேவைப்பாடு உள்ளது. இக்காலகட்டத்தில் இப்பிரச்சினை ஊடகங்களில் மிகைப்படுத்தப்படக் கூடாது. இதன்மூலம் மக்கள் மத்தியில் அவசியமற்ற பீதியை உருவாக்கி, நாடு சுதாகரித்துக்கொண்டு சுபீட்சத்தை நோக்கிப் பயணிப்பதற்கு நாங்களே தடைக்கற்களாக இருந்துவிடக் கூடாது.
இதில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமயத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றினர்.
#musilms #rauffhakeem #slmc
Spread the love