சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இந்திய பெறுமதியில் 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ள சிங்கப்பூர் அரசாங்கம் சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்தவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நாட்டு சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம், இணையத்தில் உலா வரும் வதந்திகள் உண்மைகளை தகர்த்தெறிவதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் பொய் செய்திகளைப் மூன்று பிரிவினரே பரப்பி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் தாக்குதல் நடத்த விரும்பும் நாடுகள், வர்த்தக ரீதியில் லாபம் நாடுவோர், அரசியல் லாபத்திற்காக மாற்று சமூகத்தினரைத் தாக்க வீண் வதந்திகளைப் பரப்புவோர் என பட்டியலிட்டுள்ள அவர் மத்திய கிழக்கை சேர்ந்த மூன்று ஆண்களால் ஜெர்மனியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொந்த விருப்பு வெறுப்பிற்காக சிலர் வேண்டுமென்றே பரப்பும் வதந்திகள் சொந்த நாட்டை மட்டுமின்றி, பிற நாடுகளையும் பாதிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். அதனை முற்றிலும் ஒடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை சட்டரீதியாக எதிர்கொள்ள புதிய சட்டத்தை அமுல்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் இந்த புதிய சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்காது எனவும் மாறாக பொய் செய்திகளை பரப்புவோர்களே நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒரு செய்தியை வதந்தி என அரசு முடிவெடுத்தநிலையில் அந்தசசெய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.#singapore #socialmedia #Singaporefakenewslaw