யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (11.05.19) இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தியே இவ்வாறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பதாதைகளில் வீணே சிறையிருக்கும் எம் மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் விடுதலை செய்து நாட்கள் விரையமாகாமல் கல்வி நடவடிக்கைகள் தொடங்க ஆவன செய்க, விரைந்து சிறைக்கதவுகள் திறக்கட்டும், வீணே மூடிக்கிடக்கும் எங்கள் பல்கலைக்கழகத்தின் கதவுகளும் திறக்கட்டும் என்பது உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த உயிர்த்த ஞாயிறுதினம் அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து கடந்த 3ஆம் திகதி யாழ். மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரை கைது செய்திருந்தனர்.
அத்துடன் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் தியாகதீபம் திலீபனுடைய ஒளிப்படம் இருந்ததாக தெரிவித்து, அங்கு பணியில் இருந்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #jaffnauniversitystudents #eastersundayattackslk