அருட்பணி எஸ்கே. டானியல் பொறுப்பமைய குரு கருணா நிலையம்
கிளிநொச்சியில் சக வாழ்வு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பல் இனம் சமய கலாசாரம் கொண்ட ஒரு நாடு, வெளிச் சக்திகளின் தலையீடுகளும் அதன் நலன்களுக்கும் இங்கு குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்ற போது இங்கே பிரச்சினை ஏற்படுகிறது. முரண்பாடுகளுக்கு விலைபோகாதா சமூகமாக நாம் வாழ வேண்டும். இலங்கையின் வரலாற்றில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழப்பு, சொத்திழப்பு, பொருளாதார இழப்பு என அழிவுகளே ஏற்பட்டுள்ளன.
எனவே இலங்கைளில் வாழ்கின்ற மக்களாகிய நாம் கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு நிம்மதியான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இதற்காக மதத்தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இதயசுத்தியோடு உழைக்க வேண்டும்.
முக்கியமாக அரசியல் தலைவர்கள் துய்மையான அரசியலை கொண்டு செல்ல வேண்டும், இனத்திற்காக, மதத்திற்காக, என்பதற்கப்பால் தேசத்திற்காக என்ற நிலைப்பாட்டில் அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டும். இவ்வாறான பிரச்சினை ஏற்படுகின்ற போது அரசியல் தலைமைகள் தேசத்திற்காக என்ற நிலைப்பாட்டில் இருந்து உறுதியான தீர்மானங்களை எடுத்து செயற்படுகின்றவர்களாக இருக்க வேண்டும்.
கிளிநொச்சியில் சகவாழ்வை உருவாக்குவதற்காக சமயத் தலைவர்கள் முழுமையான பங்களிப்பை மேற்கொள்கின்றனர். இங்கு நாம் வேறுபாடுகளை கடந்து வாழ்கின்றோம். அத்தோடு ஒரு சமூகத்திற்குள் சிலர் செய்கின்ற ஒரு காரியத்திற்காக அந்த சமூகத்தையே குற்றவாளிகளாக நோக்குகின்ற மனநிலை முதலில் மாறவேண்டும். இலங்கை கடந்த காலத்திலும் இத் தவறு இடம்பெற்றது. இது எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது.
அருட்பணி லூக் ஜோன் – வன்னி பிராந்திய குரு முதல்வர் அமெரிக்கன் மிசன் திருச்சபை
மத நல்லிணக்கமே இனங்களுக்கிடையேயான பிரச்சினைக்கு தீர்வு
கடந்த உயிரித்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் வேதனையை தருகிறது. இலங்கையில் இனங்களுக்கிடையே பிரச்சினையை தீர்க்க வேண்டிய தளமாக மதங்களுக்கிடையேயான நல்லிணக்கமும், நல்லுறவும்தான் காணப்படுகிறது. இலங்கையின கடந்த காலத்தை எடுத்து நோக்கினால் கிறிஸ்த்துவ காலணித்துவத்துங்களுக்கு எதிரான பௌத்த தேசியவாதமே பின்னாளில் தமிழ்தேசியத்திற்கு எதிராக மாறியது. ஆகவே தமிழ் சிங்கள இனப்பிரச்சினையின் மூலமே மதங்கள்தான். இன்றும் அவ்வாறான ஒரு நிலையிலிருந்தே இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவேதான் இலங்கையில் மத நல்லிணக்கம் இன்றி இனங்களுக்கிடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது.
இலங்கையில் இவ்வாறான பிரசை;சினைகளுக்கு நிரந்தர நிலைத்து நிற்கக் கூடிய தீர்வை காண வேண்டும் என்றால் மக்களை நாம் ஆன்மீக மயப்படுத்தப்பட வேண்டும் எப்படி உலக மயமாக்கல் உலகத்தை ஆளுகின்றதோ அவ்வாறே இலங்கையில் மக்களை ஆன்மீகப்படுத்துகின்ற போது மனித மனங்களை வென்றெடுத்து இன,சமூக,சமய முரண்பாடுகளை களைய முடியும், அத்தோடு இதன் மூலம் இன. சமய அடிப்படைவாத கொள்கைகளிலிருந்தும் மக்களை மீட்க முடியும். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சர்வமத தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர் இதனால் அவர்கள் மக்களையும் அவ்வாறே வழிநடத்துகின்றனர். இதனால் இந்த மாவட்டத்தில் இன, சமூகங்களுடையேயான முரண்பாடுகள் இல்லை இது நீடித்திருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.
வண.ஜெயந்தன் குருக்கள் – கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம்
கிளிநொச்சியில் மதத் தலைவர்களுக்கிடையே பரஸ்பர ஒற்றுமையும் புரிந்துணரவுமுண்டு
மதம் என்பது ஒரு வழிகாட்டி அனைத்து மதங்களுக்கும் ஒழுக்கமான அறநெறிமிக்க மக்களாக வாழ வேண்டும் என்றே தனது மக்களுக்கு கூறுகிறது. நானறிந்த வகையில் எந்த மதங்கள் பஞ்சமாபாதகங்கள் செய்வதனை அனுமதிக்கவில்லை நல்ல வழிகாட்டியாக உள்ள மதங்கள் எப்படி தவறான வழிகளை போதிக்க முடியும்? மத அடிப்படைவாதங்களிலிருந்து விடுப்பட்டு மதங்கள் உண்மையாக என்னென்ன கருத்துக்களை கூறுகின்றதோ அவற்றை மதத் தலைவர்களாகிய நாம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களை வழிப்படுத்த வேண்டும். அதன் மூலம் மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் கிளிநொச்சியை பொறுத்தவரை சர்வமதக் குழு உருவாக்கப்பட்டு பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தி ஒற்றுமையாக பயணிக்கின்றோம். பரஸ்பரம் மத வழிபாடுகளிலும் கலந்துகொண்டிருகின்றோம் எனவே இந்த ஒற்றுமை நீடித்து நிலைத்திருக்க வேண்டும்
நிஜாம்தீன் றிஸ்வி – பொறுப்பு மௌலவி கனக்காம்பிகைகுளம் பள்ளிவாசல்
கிளிநொச்சியில் நாம் ஏனையவர்களோடு ஒற்றுமையாக வாழ்கின்றோம். அது நீடிக்க வேண்டும்
நடந்த சம்பவம் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாம் மதத்தின் ஒரு பொறுப்பு மதத் தலைவர் என்ற வகையில் நான் மிகவும் கவலையடைகிறேன். எந்த மதத்திலம் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்த சொல்லி கூறவில்லை. எமது இஸ்லாம் மதத்தில் எந்த இடத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் கூறப்படவில்லை, இது மார்க்கத்திற்கு புறம்பான செயல். இதனை இஸ்லாம் மதம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.
பல மதங்களை கொண்ட எமது நாடு அமைதியாக ஒற்றுமையாக கௌரவமாக வாழக் கூடிய சூழல் கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டும். அதற்காக சமயத் தலைவர்கள் உழைக்க வேண்டும். இனியும் இந்த நாட்டிலில் மதத்தின் பெயரால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது.மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட இச் சம்பவங்களை நாம்வன்மையாக கண்டிக்கின்றோம்.
கிளிநொச்சியை பொறுத்தவரை சிறியளவில் வாழ்கின்ற எம்மோடு ஏனைய மக்கள் ஒற்றுமையாக பழகுகின்றார்கள், கடந்தகாலம் போன்றே நடந்துகொள்கின்றனர். இந்த நிலைமை தொடர வேண்டும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும். கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள இந்த நல்ல சூழல் எமக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையினையும் வழங்கியிருக்கிறது.
முகமது பரூஸ் -சலாம் ஜூம்மா பள்ளிவாசல் கிளிநொச்சி
கிளிநொச்சி எங்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது
இந்த மோசமான செய்தி எங்களை இன்னும் வருத்திக்கொண்டிருக்கிறது. உண்மையான இஸ்லாமியர்கள் அதனை எண்ணி வருந்திக்கொண்டிருக்கின்றார்கள். மார்;க்கம் அன்பையும் ஒற்றுமையையும், வலியுறுத்துகின்றார். நபிகள் நாயகம்அல் சல் அவர்கள் ஒரு தடவை ஒரு மனிதன் தாய் மானிடம் இருந்து மானை பிரித்து எடுத்துக்கொண்டு சென்ற போது அந்த மனிதனை மீண்டும் தாயிடம் கொண்டு சென்று விட்டுவிடுமாறு அறிவுறுத்தினார். புனித குர்னால் கூட ஒரிடத்தில கூறப்படுகின்றது. ஒரு தடவை நபிகள் நாயகம் அவர்களடைய கூட்டம் ஒன்று பயணித்துகொண்டிருந்த போது வழியில் எறும்புக் கூட்டம் இதனை அவதானித்து வழியை மாற்றி பயணிக்குமாறு பணிக்கப்பட்டார்கள். எனவே ஒரு எறும்புக் கூட கொல்லப்படக்கூடாது என்று கூறுகின்ற மார்க்கத்தின் பெயரால் இப்படி நடந்திருப்பது மிகவும் வேதனையானது.
ஏனைய மதங்களை மதித்தல், எல்லா மக்களும் சகோதரத்துவதோடு நோக்குதல் மற்றவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற செயற்பாடுகள் பன்மைத்துவம் கொண்ட இந்த நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்தும்.
கிளிநொச்சியில் முஸ்லிம் மக்கள் மிகவம் சிறியளவில் வாழ்கின்றோம் மதங்களினால் எந்த பிணக்குகளும் இல்லை இங்கு நாம் ஒற்றுமையாக வாழ்கின்றோம். சந்தோசமாக உள்ளோம். இந்த சம்பவத்திற்கு பின்னர் நாம் பயத்தோடு இருந்தோம் ஏனைய மக்கள் எங்களுடன் எப்படி நடந்துகொள்வார்கள் என்று. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போன்று எதுவும் இடம்பெறவில்லை. பாடசாலைகளில் மாணவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். எங்களுக்கு ஏனைய மதத்ததலைவர்கள் மக்கள் ஆறுதலாக உள்ளனர். எங்கள் பள்ளிக்கு அருட்தந்தையர்கள், குருக்கள் ஆகியோர் வந்து நம்பிக்கை அளித்தார்கள். இந்த நம்பிக்கையான செயற்பாடுகள் நாம் கிளிநொச்சியில் தொடர்ந்தும் அச்சமின்றி வாழ முடியும் என்ற உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது.
மாம் புவைஸ் – ஆப்தீன் ஜூம்மா பள்ளிவாசல் கரடிபோக்கு
வெளியிலிருந்து வருபவர்களால் கிளிநொச்சியில் எங்கள் ஓற்றுமைக்கு பங்கம் ஏற்படக் கூடாது
நடந்து முடிந்த சம்பவம் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். நாம் கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் என்ற வகையில் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். முஸ்லிம் மக்கள் தீவிரவாத்திற்கு ஏதிரானவர்கள். உண்மையில் ஜிகாத் என்பது மனிதன் உள்ளத்தோடு போராடுதல் ஒரு நல்ல செயலை செய்ய போகின்ற போது பள்ளிக்கு தொழுகைக்கு செல்கின்ற போது அங்கு அவருக்கு இடம்கிடைக்கவில்லை என்றால் அவ்வாறான இடங்களில் உள்ளத்தோடு போராடுதல் இவ்வாறான விடயங்களையே ஜிகாத் கூறுகின்றது. ஆனால் தவறாக கூறி மார்க்கத்திற்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாம் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம். கிளிநெச்சியில் வாழ்ந்து வருகின்றோம், இந்த ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது கிளிநொச்சி பொறுத்தவரை ஏனைய மதத் தலைவர்கள் மிகவம் முன் மாதிரியாக நடந்துகொண்டனர். நாங்கள் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டிய இடத்தில் அவர்கள் எங்களிடம் வந்து நம்பிக்கையை ஏற்படுத்தி வெள்ளிக் கிழமைகளில் ஜும்மா தொழுகையை கூட தடையின்றி மேற்கொள்ளுங்கள் நாங்கள் உறுதுணையாக இருகின்றோம் என்றார்கள். எனவே இதனையே நாம் இந்த நாட்டில் விரும்புகின்றோம்.
இதேவேளை வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரம், மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக இங்கு வருகின்ற முஸ்லிம் மக்கள் இந்த மாவட்டத்தின் உள்ள நடைமுறைகளை பின்பற்றி தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மாறாக புறம்பான செயற்பாடுகளை மேற்கொண்டால் அது இங்குள்ள முஸ்லிம் மக்களையே பாதிக்கும்.
பிரமச்சாரி சிவேந்திர சைத்தான்யா – சின்மயா மிசன் கிளிநொச்சி
கிளிநொச்சி மத நல்லிணக்கம் வலுவாக உள்ளது
எல்லா சமயங்களும் அன்பையே போதிக்கின்றன. சமயங்கள் மனிதனை மனிதனாக வாழ வைக்கவே போதிக்கின்றன. ஆனால் சமயங்களின் நல்ல போதனைகளை புரிந்துகொள்ளளாது எல்லா சமயங்களில் அவ்வவ்போது சில தீவிரவாத கொள்கையுடையவர்களாக சிலர் காணப்பட்டள்ளனர். இவர்களே அவ்வவ் போது பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணம் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றவர்களுக்கு சமயங்களின் மீது தெளிவின்மையே. அவரவர் தன் தன் சமயத்தை நன்கு புரிந்;துகொண்டு செயற்பட்டாலே இவ்வாறு மதங்களின் பெயரால் பிரச்சினைகள் ஏற்படாது. கிளிநொச்சியை பொறுத்தவரை பல்வகை மதங்கள் கொண்ட மக்கள் வாழ்கின்றனர் இவர்கள் இற்றைநாள் வரை ஒற்றுமையாக வாழ்கின்றனர். மதங்களின் பெயரால் வேறுப்பட்டு நிற்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பள்ளிக்கு சென்று அவர்களுடன் பேசி கலந்துரையாடியுள்ளோம். இங்கு மத நல்லிணக்கம் வலுவாக உள்ளது. அது தொடரவேண்டும்.
நேர் காணல் – மு. தமிழ்ச்செல்வன்