உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி நகருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலி சாஹிர் மௌலானா மற்றும் ஜெ.சி. அலவத்துவல ஆகியோர் இன்று (14) நேரில் சென்று பார்வையிட்டனர்.
கொட்டம்பாபிடிய பிரதேசத்துக்கு விஜயம்செய்த பிரதமர், அங்கு தாக்குதலுக்கு இலக்கான மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு சென்று அழிவுகளை நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் குளியாப்பிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட சிலரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளையும், மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் சந்தித்து தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனையவர்கள் முன்வைத்த கருத்துகளை செவிமடுத்த பிரதமர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் கலவரங்கள் ஏற்படலாமென்ற அச்சம் நிலவுவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அங்கு சமூகமளித்திருந்த பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியமை தொடர்பில் முதலில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரயோகிப்பதில் ஏற்பட்ட பலவீனமே நேற்றைய வன்செயல் நடவடிக்கைகள் உக்கிரமடைவதற்கு காரணமாக அமைந்ததென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கூட, தாக்குதல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான வன்செயல்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தால் இந்தளவு நிலைமை மோசமடைந்திருக்காது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதாகவும் பிரதமர் அங்கு உறுதியளித்தார். கடந்த வருடம் திகன மற்றும் அம்பாறையில் நடைபெற்ற சம்பவங்களின்போது இழப்பீடுகள் வழங்கிய அதே சுற்றறிக்கையின் பிரகாரமே, இதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த துரதிஷ்டமான நிலைமை உரிய முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதில் தவறிழைக்கப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அத்துடன் மக்கள் அச்சமின்றி வாழவேண்டிய சூழ்நிலையொன்றை உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.
இத்தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொண்ட தருணத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் பஸ் மற்றும் மோட்டார் வண்டிகளில் வந்து உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடாத்தியதாக பிரதமரினதும் அமைச்சர்களினதும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு இந்த விடயத்தை அங்கு சமூகமளித்திருந்த பௌத்த மதகுருமார்களும் உறுதிப்படுத்தினார்கள்.
மேற்படி அசம்பாவிதத்தின் பின்னணியில் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்ட ஆறு பேரை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வந்து விடுவித்துச் சென்றதாகவும் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை இந்த தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்னணியொன்றும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை காரணமாக வைத்து, ஆட்சி மாற்றமொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த குண்டர்கள் இவ்வாறான தாக்குதல்களை தொடுத்திருந்ததாக சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாகனங்களில் வந்தவர்களின் பதிவுகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை சி.சி.ரிவி. கமெராக்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகள் மூலம் இனம்கண்டு அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், சூத்திரதாரிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அங்கிருந்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட ஹெட்டிபொல, கொட்டம்பாபிடிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற இடங்களில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்குச் சென்று, மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.
ஆயுதங்களோடு வெளியூர் மக்களும் உள்ளூர் மக்களும் ஒன்றாக சேர்ந்து தங்களை தாக்கியபோது தாங்கள் அனுபவித்த மன வேதனைகளை பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோக்குகின்ற நோன்பை ஒழுங்காக நோற்க முடியாமல் செய்ய இத்தகைய விஷமிகளின் செயற்பாடுளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலநிலை தொடர்பில் கவலை தெரிவித்தனர்.
இத்தாக்குதல் காணொளிகள் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் ஒன்றின் சி.சி.ரி.வி. பதிவகத்தை (ஹார்ட் டிஸ்க்) சீருடைகளில் வந்தவர்கள் கழற்றி எடுத்துக்கொண்டு சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். அவ்வாறான நிலைமைகள் மேலும் நிகழாது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக தமக்கு அறியத்தருமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.
இதில் இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலான உட்பட வடமேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எச்.எம். ஜெஸ்மின் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். #ranilwickremesinghe #kuliyapitiya
நன்றி – அததெரண