ஜூலை 83
படுகொலைகளைப்
பார்த்துக் களித்தார் பற்றி
நான் நினைத்துப் பார்ப்பதுண்டு
அத்தனை கெஞ்சும் கண்களும்
அவர்கள் நாட்களூடும்
வருடங்களூடும்
மின்னலாய்க் குத்துவதில்லையா?
சாகுமுன் ஆதரவற்று
அழுது குளறும்
அனாதைக் குழந்தைகளின்
குரல்கள் அவர்கள் இரவுகளைக்
கொள்ளையிடுவதில்லையா?
நாற்பது வருடங்களின் பின்
மீண்டும் தீச்சுவாலை.
அந்திவானம் வன்முறையால்
இரத்தமயமாகிறது
திருமண உறவால் மட்டும்
தொடர்புடையவள் ஆயினும்
நான் குற்றவாளியாயும்
பாதிகப்பட்டவளாயும்
இருப்பதை உணர்கிறேன்
புகைச் சுருளைக் கண்டு
முகம் சுழிக்கிறேன்
தீயை நினைத்துக்
குறுகிப் போகிறேன்
ஆனால் சிலரோ
எரியும் நெருப்பில்
குளிர் காய்கிறார்கள்
ஆங்கில மூலம் ஆன் றணசிங்க 1983. (கவிதையின் பகுதிகள்)
தமிழில் சோ.பத்மநாதன்