காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
கமலின் பேச்சு குறித்து மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். எப்போதுமே அவர் தேசபக்தராகத்தான் இருப்பார் எனக் கூறியிருந்தார்.
தேசத் தந்தை என அழைக்கப்படுகிற காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன.
இதுபோல பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று இரவே, கோட்சேவை தேசபக்தர் எனத் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சையான கருத்தைக் கூறி அதற்கு இவர் மன்னிப்பு கோருவது இம்மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.