Home இலங்கை முள்ளிவாய்க்கால் பேரழிவு – மே 18 பிரகடனம்…

முள்ளிவாய்க்கால் பேரழிவு – மே 18 பிரகடனம்…

by admin

தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து -மே 18 பிரகடனம்

தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து என் மே 18 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம்தோறும் மே மாதம் 18 ம் திகதி தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது அந்தவகையில் இம்முறை தமிழினப் படுகொலை நினைவேந்தல்10 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இடம்பெற்றது இங்கு மே 18 பிரகடனம் வெளியிடப்பட்ட்து குறித்த பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பேரன்பிற்குரிய உறவுகளே வரலாற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலை உச்சம் தொட்ட நாட்களின் தசாப்தத்தின் நிறைவில் எம் உறவுகள் துடிதுடிக்க கொல்லப்பட்ட மண்ணில் கனத்த இதயத்துடன் அவர் நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த சிறீலங்கா பேரினவாத அரசு வரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது. இவ் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதி உச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவு கூரவில்லை. சிங்கள–பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்கு முறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது எம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமை.

தமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரை குத்தி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி வந்துள்ளது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தினூடு ஆயுதப்போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன. பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது. தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள், வன்புணரப்பட்டார்கள். பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். தமிழர்கள் வந்தேறு குடிகளாக சித்தரிக்கப்பட்டு சிறிலங்கா சிங்கள-பௌத்த தேசம் அது சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என காலணித்துவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசு நவ காலணித்துவத்தை கட்டமைத்தது. இது தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவேண்டி தமிழர்கள் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள். நடந்தேறிய அநீதிகளையும், உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை.

சிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள-பௌத்த மயமாக்கத்தையும், இராணுவ மயமாக்கத்தையும் விஸ்தரித்து இராணுவ இருப்பை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் படைத்தரப்பாலும், மகாவலி அபிவிருத்தி திட்டத்தாலும், தொல்லியல், வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர் மத்தியில் சிறிலங்கா அரசு பயத்தை தக்க வைத்துக் கொண்டு உளவியல் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தமாகியும் கைதுகளும், எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. பேச்சுரிமைக்கான வெளி நசுக்கப்பட்டுள்ளது.

ஒரு தேசத்தின் கலை-கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதற்கு அடிப்படையான பூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதென்பது எல்லா தேசங்களினதும் விட்டுக்கொடுக்கவே முடியாத அடிப்படை உரிமையாகும். சமூக கட்டுமானத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் சிங்கள தேசத்தில் இருந்தும் தனித்துவமாக வேறுபடுத்திப்பார்க்கக் கூடிய தனி சிறப்பியல்பான அம்சங்களைக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சிங்களவருக்கு இருப்பது போன்று அதைவிட தொன்மையானதும் செழிப்பானதுமான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதினாலும், சிங்கள மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மிகத்தொன்மையான மொழிப்பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களை தன்னகத்தே உள்ளீர்த்து தனித்துவமான மொழியைக் கொண்டிருப்பதாலும், இலங்கைத்தீவில் வடகிழக்கு பகுதியை தமிழ் தாயகமாகக் கொண்டு வரலாற்றுப்பூர்வ குடிகளாக வாழ்வதாலும், சிங்கள அரசானது திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு மூலம் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பை அழிப்பதற்கான எத்தனங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு தசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நினைவு கூருவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்படுவது உண்மையை மறுப்பதும் மறைப்பதுமாகும். சிறிலங்கா அரசு மறுப்புவாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை வரலாற்றில் மறுத்து வந்துள்ளது. சாட்சியங்களை பொய்யர்களாக்கி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின், கையளிக்கப்பட்டவர்களின் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றி வீரர்களாக உலா வருகின்றனர்.

பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தசாப்தத்தில் ஒன்று கூடியுள்ள தமிழ் மக்களாகிய நாங்கள் நினைவுகூரலை அணி திரட்டலாக மாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். அந்திய மீட்பர்களை விடுத்து மக்கள் சக்தியில் நம்பிக்கை வைத்து, நினைவு கூரலை சமூக இயக்கமாக மாற்றி சபதம் செய்வோம். எங்கள் உறவுகளின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்வோம்.

 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த

 தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பில் கோர

 தமிழர் இன அடையாள இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க

 தமிழர் சமூக அமைப்புக்களை பலப்படுத்தி விடுதலைக்காக முனைப்புடன் உழைக்க

மக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்ற வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே. தமிழ்த் தேசிய நினைவுத்திறம் அடக்குமுறைக்கெதிரான ஊடகம் என்பதை நினைவிற் கொண்டு உறுதிபூணுவோம் தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணிப்பில் இணைவோம்.

மே 18 இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ் தேச எழிச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு-கிழக்கு) என தெரிவிக்கப்பட்டுள்ளது. #may18 #மே18 #Mullivaikkal #முள்ளிவாய்க்கால் #தமிழ்இனப்படுகொலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More