164
நிலத்தைக் கிளர்ந்து உருவியெடுத்த
நிறம் வெளுத்த ஆடையினை உடுத்தி
உக்கிக் கரையாத எலும்புக்கூடுகளுடன்
பேசுமொரு தாயின்
உடைந்த விரல்களில் பட்டன
தடித்துறைந்த இறுதிச் சொற்கள்
சொற்களை அடுக்கினாள் மலைபோல்
கையசைத்து விடைபெற்றுக் களம் புகு நாளில்
வெகுதூரம் சென்றுவிட்ட பிறகும்
படலையிற் கிடந்து பார்த்திருந்தது போல்
பறவைகளின் சிறகுகள்
அஞ்சலி மலராய் சிதறிய மணல்வெளியிற்தான்
இன்னமும் புரண்டு கிடக்கிறாள்
இதே கரையிருந்தே சீருடைகளை களைந்து,
கடல் வெளியில் போட்டான்
கடலில் கொன்று புதைக்கப்பட்டவர்கள்
அதை அணிந்து கீழே செல்ல
வாயிற்குளிருந்த விடப் குப்பியை
தோள்களில் தொங்கிய துவக்கை
ஈர மணலில் புதைத்து
எடுத்துச் சென்றான்
எதனாலும் கைவிடாக் கனவு கலந்த
வாழ்வின் மீதொரு பாடலை
‘பிறகு, காற்றை கிழித்து மறைந்தானோ?’
குருதி உறைந்த வெள்ளைத் துணியை
போர்த்தி நடுங்கும் தாயின் மடியில்
தேய்ந்து ஓட்டை விழுந்த ஒரு சோடிச் செருப்பு
பாலைவனத்தில் விழுந்த சிறு இலைபோல்
காற்றில் உலர்ந்துபோன குரல்
மெலிந்த பனைபோல் பறந்து செல்லும் தேகம்
மெலிந்த பனைபோல் பறந்து செல்லும் தேகம்
பறவையின் எச்சத்திற்கு அதிரும் விழிகள்
ஆனாலும்,
பறையென முழங்கியழைப்பாள் மகனின் பெயரை.
Spread the love