உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.19) கொழும்பு – ஷங்கிரி-லா நட்சத்திர விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ஆகியோரின் உயிரியல் மாதிரிகளைக் கொண்டு, கடந்த சில தினங்களாகவே மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் போதே, இந்த விடயம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு சினமன் கிராண்ட் மற்றும் ஷங்கிரி-லா ஆகிய இரு விடுதிகளிலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும், தெஹிவளை ட்ரொபிக்கல் இன் விடுதியிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி உயிரிழந்த குண்டுதாரிகள் தொடர்பான டீஎன்ஏ பரிசோதனைகள் நிறைவுசெய்யப்பட்டு, உயிரிழந்தவர்கள் தொடர்பான உறுதிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குண்டுதாரிகள் தொடர்பான டீஎன்ஏ பரிசோதனை அறிக்கைகள், இன்றைய தினம் (21.05.19), குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயம் ஆகியவற்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய இருவர் தொடர்பான டீஎன்ஏ பரிசோதனை உறுதிப்படுத்தல்கள், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #eastersundayattacklk #srilanka #zahranhashim #தேசியதௌஹீத்ஜமாஅத் #ஷங்கிரிலாநட்சத்திரவிடுதி