அம்பாறை – கல்முனை பிரதேசத்தில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமின் பிரதான அமைப்பாளராகக் கருதப்படும் கல்முனை சியாம் உள்ளிட்ட ஐவரை, அரச புலனாய்வுப் பிரிவின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் சிலர், நேற்றைய தினம் (20.05.19) கைது செய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணைகளைத் தொடர்ந்தே, மேற்படி சியாம் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே, ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைதான சியாம் என்பவரே, சஹ்ரானின் உதவியாளர்களுக்கு, சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் தங்குவதற்கான வீடுகளைப் பேசிக் கொடுத்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நபர், ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வைத்தே பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் இவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பிரபல உறுப்பினர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களுக்குப் பின்னர், அந்தத் தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இதுவரையும் 94 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. #சஹ்ரான்ஹாஸிம் #eastersundayattackslk #srilanka #zahranhashim