குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் வீண் விரையமாக்கப்படுகிறது என விவசாயிகளும், பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக இரணைமடுகுளத்து நீர் இடது மற்றும் வலது கரை நீர்ப்பாசன வாயக்கால் ஊடாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தற்போது அளவுக்கு அதிகமாக திறந்துவிடப்பட்டுள்ளதால் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல் நிலங்களை கடந்து கழிவு வாய்க்கால்கள் ஊடாக வெறும் நிலங்களுக்குச் சென்று அங்கு சிறு குளங்கள் போன்று தேங்கி நிற்கிறது.
குஞ்சுப்பரந்தன், திருவையாறு மகிழங்காடு, பன்னங்கண்டி ஆறு, நான்காம் வாய்க்கால் போன்ற இடங்களில் மேலதிக நீர் கழிவுவாய்க்காலில் சென்றடைக்கிறது என பிரதேச கமக்கார அமைப்புக்கள் தெரிவித்ததாக இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.
இரணைமடு குளத்தின் நீர் கொள்லளவு 34 அடியாக இருந்து 36 அடியாக உயர்தப்பட்ட நிலையில் 8500 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை 12500 ஏக்கராக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் தற்போது 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக திறந்து விடப்பட்டுள்ள நீரே தற்போது வீண் விரையமாக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவித்த போது இரணைமடுகுளத்தின் கீழான நீர்ப்பாசன கட்டுமானங்களில் காணப்படுகின்ற குறைப்பாடுகளும், ஊரியான போன்ற இரணைமடு குளத்திலிருந்து தொலைவில் உள்ள பிரதேசத்திற்கு நீரை கொண்டு செல்வதற்காக அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டதுமே இவ்வாறு நீர் வீண் விரையமாக காரணமாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் நீர் முகாமைத்துவத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அமைந்துள்ளதோடு விவசாயிகளும், கம விதானையாக்களும் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்
ஒரு ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 3.5 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்படுகின்ற போதும் கிளிநொச்சியில் ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு தற்போது 6.5 ஏக்கர் அடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வாறு அதிகளவு நீர் கழிவு வாய்க்கால் ஊடாக வீண் விரையமாகவும் செல்கிறது. என்பதும் மிகவும் கவலைக்குரியது. திருவையாறு மகிழங்காடு பிரதேசத்தின் உள்ள கழிவு வாய்க்கால் ஊடகா நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக் கூடிய நீர் விரையமாக சென்றுக்கொண்டிருக்கிறது. அத்துடன் சில இடங்களில் சிறு குளங்கள் போன்று விரையமான நீர் தேங்கி நிற்பதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சில இடங்களில் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து வயல்களுக்கு நீர் செல்கின்ற கிளை வாய்க்கால் கதவுகள் முழுமையாக பூட்டப்பட்ட நிலையிலும் கதவுகளை மேவி நீர் வீண் விரையமாக செல்கிறது.
சிறுபோக நெற்செய்கைக்காக கடந்த மாதம் இரணைமடுகுளம் திறந்து விடப்பட்ட போது 33.3 அடியாக இருந்த நீர் மட்ட இன்றைய நிலையில் 28 அடியாக காணப்படுகிறது. இன்னும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நீர் திறந்து விடப்படவேண்டும். என்பதும் குறிப்பிடத்தக்கது.
( விரையமான நீர் குளங்கள் போன்று தேங்கி நிற்கும் சாட்சிகளும், கழிவு வாய்க்கால் ஊடாக பெருமளவு நீர் வெளியேறுவதும், பூட்டப்பட்ட கதவுகளுக்கு மேலாக நீர் பாயும் காட்சிகளும் படங்களில்)
#இரணைமடுநீர் #வீண் விரையம் #கவலை #நெற்செய்கை #iranaimadu #waste