பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்கிறது. இதனால், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளதுடன் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதால் அதையொட்டி, இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்படுவதுடன் அது தீர்மானமாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். இதையடுத்து, ஜனாதிபதி 16-வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பிப்பார்.
17-வது மக்களவை அதாவது புதிய அரசு அடுத்த மாதம் 3 ஆம் திகதி பதவியேற்க வேண்டும். தேர்தல் ஆணையாளர்கள் ஜனாதிபதியை சந்தித்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளித்த பிறகு புதிய அரசை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது
#பாஜக #பாராளுமன்ற தேர்தல் #மோடி
Add Comment