கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் இதுவரை 51க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருநாகல் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வைத்தியர் தொடர்பிலான முறைப்பாடுகளை இன்றும் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதிப் பணிப்பாளர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சிலரும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய வைத்தியசாலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், குருநாகல் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் வீர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சின் குழுவொன்று இன்று குருநாகல் வைத்தியசாலைக்கு செல்லவுள்ளது. குறித்த வைத்தியர் தொடர்பில் 15க்கும் மேற்பட்ட முறைபாடுகள் காவற்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலான முறைப்பாடுகள் அனைத்தும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, காவற்துறையினர் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்து வைத்தியர் ஷிஹாப்தீன் சாஃபி கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
40 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் அவர் வசமுள்ளதாக காவற்தறையினருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன் அந்த சொத்துக்களை ஏதேனும் அடிப்படைவாத குழு அல்லது பயங்கரவாத குழு அவருக்கு வழங்கியதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் சாஃபியின் பெயரிலுள்ள 17 காணி உறுதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் குருநாகலை சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அத்துடன், சந்தேகநபர் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 4 முறைப்பாடுகள் அவருடன் பணியாற்றிய வைத்தியர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. #வைத்தியர்சேகுஷிஹாப்தீன்மொஹமட்சாஃபி #குருநாகல்வைத்தியசாலை #KurunegalaHospital #DrShafi