சாவகச்சேரி பொதுச் சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்தை எதிர்த்து சந்தை வியாபாரிகள் நாளைய தினம் புதன்கிழமை சந்தையை மூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை தீர்மானித்து, அதற்கான கேள்வி கோரலையும் விடுத்துள்ளது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சந்தை குத்தகைக்கு விடப்படுவதனால், வியாபாரிகள் மாத்திரமின்றி நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை நகர சபை கைவிட வேண்டும்.
அத்துடன், வியாபரிகள், உற்பத்தியாளர்கள் நுகர்வோர் ஆகியோரின் வாகனங்களை பாதுகாக்கும் விதமாக வாகன பாதுகாப்பு தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும், உழவர் சந்தையை மாற்றியமைக்க வேண்டும், எனவும் கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதேவேளை தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நகர் பகுதி வர்த்தகர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சபையில் உறுப்பினர்கள் கோரி வந்துள்ளனர். அதற்கு தவிசாளர் பின்னடித்து வந்துள்ளார். அந்நிலையில் கடந்த 16ஆம் திகதி அமர்வில் உறுப்பினர்கள் கடுமையாக வலியுத்தியமையால், சந்தையை குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன் போது, வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், மற்றும் நுகர்வோர் ஆகியோரின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வாறு நிபந்தனைகள் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் ஜீன் முதலாம் திகதி தொடக்கம் சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே கேள்வி கோரலும் விடப்பட்டது. #சாவகச்சேரி #Chavakacheri