முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, செம்மலையின் நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை முன்பிருந்தபடியே மீண்டும் புனரமைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளை இட்டிருந்தது. குறித்த பகுதியில் குடியேறியுள்ள பௌத்த பிக்குவால் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பழமையான பெயரே மீண்டும் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று குறித்த சர்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்த்தினரால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்டநீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . இந்த விசாரணைகளின் போது நீதிமன்று இம் மாதம் 6 ஆம் திகதி வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக கணதேவி தேவாலயம் என எழுதப்பட்டுள்ள பெயரை நீக்கி அதன் மரபான பெயரான நீராவியடி பிள்ளையார் ஆலயம் என எழுதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு நீதிமன்று கட்டளையிட்டிருந்தது .
இந்த கட்டளை வழங்கப்பட்டு 20 நாட்களை கடந்துள்ள போதிலும் காவல்துறையினர் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுடன் பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்கு மாத்திரம் புதிதாக இரண்டு சிசிரிவி க்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் மன்றின் கவனத்துக்கு பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பாக மன்றில் வாதாடிய சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.
இதனையடுத்து முல்லைத்தீவு காவல் நிலைய தலைமை அதிகாரியை மன்றுக்கு அழைத்த மாவட்ட நீதிபதி சம்பவங்கள் குறித்து வினவியதுடன் உடனடியாக பெயரை மாற்றி எழுத்துமாறும் பௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி க்காணிப்பு கெமராக்களை உடனடியாக அகற்றுமாறும் கட்டளையிட்டார். இதனையடுத்து நேற்றைய தினம் நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்ற பழமையான பெயர் மீண்டும் எழுதப்பட்டதுடன் அகற்றப்பட்ட சிசிரிவி க்காணிப்பு கெமராக்களும் இன்று நீதிமன்றத்தில் காவல்துறையினரால் சமர்பிக்கப்பட்டது.
#மீண்டும் #புனரமைக்கப்பட்டது #நீராவியடிப் பிள்ளையார் #பெயர் பலகை