கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக நிலைமைகள் குறித்தும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது பொருளாதார நிலைமையினை மேம்படுத்த ஆளுநரால் மாகாணத்தினுள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள விவசாய பண்ணைகள் மற்றும் மர முந்திரிகை தோட்டங்களை கூட்டுறவு முறையினூடாக அப்பிரதேசங்களின் மக்களுக்கு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினரினால் ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வடமாகாணத்தின் தண்ணீர் மற்றும் காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்குஆளுநர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆதரவினை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்கு நன்மைபயக்கும் ஆளுநரின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இதன்போது தெரிவித்ததாகவும் ஆளுநர் அலுவலக செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.