Home இலங்கை முஸ்லிம் சமூகத்தவர் மீது வெறுப்படையச் செய்வதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்…

முஸ்லிம் சமூகத்தவர் மீது வெறுப்படையச் செய்வதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்…

by admin

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் அறிக்கை

இன்றைய பதற்றமான சூழ்நிலையில் சந்தேகங்களும்,

நிச்சயமற்ற தன்மையும் மக்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள வேளையில், சமூகங்களுக்கிடையில் அமைதியும் ஒற்றுமையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்களிப்பைச் செய்வது ஊடகங்களின் கடமையும், பொறுப்பும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புவதாகத் தெரிவித்துள்ள கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பெரும்பான்மை சமூகத்தினர் முஸ்லிம்கள் மீது வெறுப்படையக் கூடியவாறு சாதாரண சம்பவங்களை கூட ஊதிப் பெருப்பித்து பூதாகரமாக்குவதை ஊடகங்களில் பணிபுரிவோர் தவிர்த்து கொள்ள வேண்டுமென வினயமாக வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான செய்தி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாத முஸ்லிம்கள் சிலர் மேற்கொண்ட கீழ்த்தரமானதும் மிலேச்சத்தனமானதுமான படுகொலைகளின் விளைவாக பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து அவதிப்படுகின்றனர்.

இந்த இக்கட்டான வேளையில் மேற்கொள்ளும் நோவினை மிக்க பயத்தினூடாக இலங்கை முஸ்லிம்கள் தாம் இத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொள்வதற்கு வழிகோலிய ஏதுக்கள் பற்றி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. பிரதான ஊடகங்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மிகவும் பாரதூரமான செயற்பாடுகளை தளர்த்தினாலேயன்றி சகிப்புத்தன்மையோடும், பச்சாத்தாபத்தோடும் சுயவிமர்சனத்திற்கான வழிவகைகளை கண்டறிவது எமது சமூகத்தைப் பொறுத்தவரை மிகவும் சிக்கலான காரியமாக ஆகிவிடும்.

அரசியல் ரீதியாக நெறிப்படுத்தப்படும் ஊடக நிறுவனங்கள் ஒரு சமூகத்தவரை மற்றொரு சமூகத்தவர் மீது ஆத்திரமூட்டச் செய்வதன் மூலம் மோதலை வளர்ப்பதல்லாது, அரசாங்கத்தையும் ஆளும் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளையும் அவமானத்திற்கு உள்ளாக்குவதாகும். சில பிரதான ஊடகங்கள் “இஸ்லாமோபோபியா” எனப்படும் இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மையை நயவஞ்சகத்தன்மையோடு கையாண்டு, சட்டம் தனது கடமையை நிறைவேற்றுவதற்கு முன்னரே தாமாக தீர்ப்பை வழங்கிவிடுகின்றன.

அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகள் அரசாங்கத்தின் மீது அடர்ந்தேற மக்களை தூண்டுகின்ற வேளையில், அரசாங்கம் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்; போது ஊடகங்கள் தமது சொல்லாட்சியை உரிய முறையில் கையாள்வதற்கான பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்றன.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீம் பிரதான ஊடகங்களை மையப்படுத்தி வெளியீட்டுள்ள காரசாரமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #முஸ்லிம்காங்கிரஸ்தலைவர் #இஸ்லாமோபோபியா #ஸ்ரீலங்காமுஸ்லிம் #காங்கிரஸ்முஸ்லிம்கள் #ஹக்கீம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More