வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலகளவில் பிரசித்தம் பெற்றுள்ள நிலையில், அவர் வழங்கியுள்ள நேர்காணலில், தயாரிப்பாளர் சங்கம் தன்னை அழிக்க பார்ப்பதாக குற்றம்சுமத்தியுள்ளார். நேசமணி கதாபாத்திரம் பிரசித்தம் பெற்றிருப்பது குறித்து நடிகர் வடிவேலு குறிப்பிடுகையில், ‘எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வார்கள். அதுபோல இந்த நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே பிரண்ட்ஸ் பட டைரக்டர் சித்திக்கையே சேரும். நேசமணி என்று ஒரு கேரக்டரை உருவாக்கியதே அவர்தான் என்று குறிப்பிட்டார்.
படப்பிடிப்பில் நடிக்கும்போது காமெடியில் எனக்கு தோணும் சின்னச் சின்ன ஐடியாக்களை அவரிடம் சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னது இல்லை. சந்தோஷமாக என் விருப்பத்துக்கு நடிக்கவிட்டார். அப்படி ஒரு பெருந்தன்மை கொண்ட டைரக்டர் சித்திக்.மேலும் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சுராஜ், வி.சேகர் ஆகியோரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகைச்சுவை மன்னர்கள்.
நான் வாழக்கூடாது, என்னை சாகடிக்கவேண்டும் என்று என்னை அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைபடவில்லை.
சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகன், மகளுக்கு திருமணம் செய்து கடமையை முடித்தேன். ஒரு வழியாக வாழ்க்கையை செட்டில் செய்துட்டேன். இனிமேல் சினிமாவில் நடிக்கிறது கடவுள் கையில் தான் இருக்கிறது.
இம்சை அரசன் 2-ம் பாகத்தில் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது பங்களிப்பு இல்லாமல் அந்த படத்தை எடுக்க முடியாது. மொத்த படத்தையும் நான்தான் முதுகில் சுமக்க வேண்டும். ஆனால் ‘நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதற்கு காரணம்.
அதை புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி? இப்போது நான் நடிக்காமல், வீட்டுலேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. அப்படியே இருந்துவிட்டு போகிறேன். மற்றபடி, நான் நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறதை இன்னும் பார்க்கவில்லை.
மோடி பதவி ஏற்கும் செய்திதான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை’.
இவ்வாறு அவர் கூறினார்.